பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, மோகனூர் காவிரி ஆற்றில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

 பரமத்தி வேலூர் வட்டத்தில் வேலூர், ஜேடர்பாளையம் சோழசிராமணி மற்றும் மோகனூர் காவிரி ஆற்றில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.


 பரமத்தி வேலூர் வட்டத்தில் வேலூர், ஜேடர்பாளையம் சோழசிராமணி மற்றும் மோகனூர் காவிரி ஆற்றில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் ரசாயனம் கலக்காத கிழங்கு மாவு மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான சிலைகளை அந்தந்தப் பகுதிகளில் வைத்து, கடந்த மூன்று நாட்களாக சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். மூன்றாம் நாளான சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, பூலாவாரி, பாப்பாரப்பட்டி, வையப்பமலை, வெண்ணந்தூர், திருச்செங்கோடு,மொளசி, இளம்பிள்ளை, பச்சாம்பாளையம் மற்றும் பூலாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கொண்டுவரப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. பாதுகாப்புக் கருதி பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் மற்றும் சோழசிராமணி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மோகனூர் காவிரி ஆற்றில்... நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் 700 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும், 622 சிலைகள் வைக்க போலீஸார் அனுமதி அளித்திருந்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
அவற்றை சரக்கு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. மோகனூர், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில் அருகே ஆற்றிலும் கரைப்பதற்காக எடுத்துவரப்பட்ட சுவாமி சிலைகள் கரையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன.
மோகனூர் காவிரி ஆற்றில், மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 700-க்கும் மேற்பட்ட சிலைகள், விசர்ஜனம் செய்யப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் மோகனூர் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையில், ஏராளமான போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், நீச்சல் தெரிந்த உள்ளூர் நபர்கள், மீனவர்கள் என 10 பேர் இரண்டு பரிசல்களில் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்
பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com