ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க வெற்றி பெறும்:  டி.டி.வி.தினகரன்

எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க தான் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார். 

Updated On :24 ஜனவரி 2019, 4:44 am IST

எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க தான் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார். 
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.  இக் கூட்டத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்  பேசியது:
 ஆட்சியாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டம் என்றாலே கூட்டம் நடத்த அனுமதி அளிப்பதில்லை.  ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்றுதான் கூட்டம் நடத்தும் நிலை உள்ளது. 
அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் இப்போதைய ஆட்சியாளர்கள் அ.ம.மு.க என்று சொன்னாலே அச்சப்படுகின்றனர். இவர்கள்தான் இப்படி எனறால் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் எங்களைப் பார்த்து அஞ்சுகிறது.  திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க.  தலைவர் கருணாநதி 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.  ஆனால், அங்கு இடைத்தேர்தல் அறிவித்தபோது ஆளும் கட்சி மட்டுமல்லாது,  தி.மு.க.வினரும் நீதிமன்றப் படியேறி இடைத்தேர்தலை தடுத்து நிறுத்தினர். 
எடப்பாடி பழனிசாமி முதல்வராகக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த செம்மலை தற்போது கொடநாடு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.    பதவி, பணம், அதிகாரம் என்பதற்காக என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையில் சில அமைச்சர்கள் உள்ளனர்.      கொடநாடு விவகாரத்தில் முதல்வர்  ஏன் பதற்றப்படுகிறார்.  சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசு கொடநாடு விவகாரத்தை ஏன் பரிந்துரைக்கக் கூடாது. விரைவில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் பொதுத் தேர்தல்கள் வர உள்ளன.   இப்போதுள்ள ஆட்சியாளர்கள்   வாக்குக்கு எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தாலும் மக்கள் இவர்களிடம் ஏமாற மாட்டார்கள்.  எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி இதுவரைக்கும் தோல்வியை சந்தித்ததே இல்லை.  ஆனால் இப்போது இந்தக் கட்சியின் நிலை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். 
 ஆர்.கே. நகரில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.  திருவாரூரில் தேர்தல் நடந்திருந்தால் அ.ம.மு.க. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. தான் வெற்றி பெறும் என்றார்.
தொடர்ந்து அவருக்கு கட்சி பொறுப்பாளர்கள் வெள்ளிவாள் பரிசாக வழங்கினர்.  மாற்றுக் கட்சியினர் பலர் தினகரன் முன்னிலையில் தங்களை அ.ம.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.  
கூட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் சாமிநாதன் தலைமை வகித்தார்.  கிழக்கு மாவட்டச் செயலாளர் சம்பத்குமார் வரவேற்றார்.   மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நல்லியப்பன், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் நாச்சிமுத்து, கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திலகம், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் திலகவதி, சந்திரன், பொருளாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில்,  அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்புச் செயலாளர் ரவிக்குமார், புதிய திராவிட கழக நிறுவனத் தலைவர் ராஜ்கவுண்டர்,  அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனிவேல், வர்த்தக அணி இணைச் செயலாளர் நல்லியப்பன் மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜ்குமார்,  சக்தி கல்வி கலாசார அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், அக்ரி நடராஜ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள்,தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.
பேட்டி
பின்னர் அவர்  செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:  மக்களவைத் தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டுக் குழுவை தேவை வரும்போது அறிவிப்போம். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். முடிவு வந்தவுடன் நிச்சயமாகக் கூறுகிறேன். மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால் நல்லது என்றார்.   பின்னர் அவர் அ.தி.மு.க,பா.ஜ.க தேர்தல் கூட்டணிக்கு பதில் அளித்த போது, தேர்தல் வந்தால் அ.தி.மு.க மூழ்கும் கப்பல்.  அதில் யார் ஏறினாலும் மூழ்குவார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.