நாமக்கல்: 2 கண்டெய்னர் லாரிகளை பிடித்து போலீஸார் விசாரணை

 நாமக்கல்லில் கடைவீதி வழியாக வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை பிடித்து போக்குவரத்து போலீஸார் சனிக்கிழமை விசாரணை செய்தனர்.

 நாமக்கல்லில் கடைவீதி வழியாக வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை பிடித்து போக்குவரத்து போலீஸார் சனிக்கிழமை விசாரணை செய்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், வாக்காளர்களுக்கு  பணம் விநியோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்படும் பணம், தங்கம், வெள்ளி, ஜவுளி வகைகள்,  மதுப்புட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.  
இந்த நிலையில், சனிக்கிழமை காலை நாமக்கல்லில் கடைவீதி வழியாக கர்நாடக பதிவு எண் மற்றும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட இரு கண்டெய்னர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை போக்குவரத்து போலீஸார் பின்தொடர்ந்து வந்து பிடித்து நிறுத்தினர். பின்னர், இரு லாரிகளும் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 30 நிமிட விசாரணைக்குப் பின் இரு லாரிகளும் விடுவிக்கப்பட்டன.
இது தொடர்பாக, போக்குவரத்து போலீஸார் கூறியது:  வழக்கமாக நாமக்கல் நகருக்குள் காலை 8 மணிக்கு மேல் கனரக வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடைவீதி வழியாக இரு கண்டெய்னர் லாரிகள் வந்ததால் அவற்றை விரட்டி பிடித்தோம். பின்னர், காவல் நிலையம் முன்பாக நிறுத்தச் செய்து, அதில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தோம்.   பெரம்பலூர் மாவட்டத்துக்கு இரும்பு சார்ந்த உபகரணங்களும், ஜவுளிகளும் எடுத்துச் செல்வது தெரியவந்தது. நகருக்குள் அத்துமீறி நுழைந்ததற்காகத் தான் நாங்கள் லாரிகளை மடக்கினோம். கண்டெய்னர்களை திறந்து பார்த்து  சோதனையிட எங்களுக்கு அதிகாரமில்லை. அதை, தேர்தல் பறக்கும் படையினர் தான் செய்ய வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கண்டெய்னரை நிறுத்தினாலே பணம், பொருள் இருப்பதாக மக்கள் தவறுதலாக நினைக்கிறார்கள் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com