நாமக்கல்லில்  2-ஆவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை

 நாமக்கல்லில் 2-ஆவது நாளாக அரசு ஒப்பந்ததாரர்  பி.எஸ்.கே.பெரியசாமியின் பண்ணை வீடு, அலுவலகம்  மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்


 நாமக்கல்லில் 2-ஆவது நாளாக அரசு ஒப்பந்ததாரர்  பி.எஸ்.கே.பெரியசாமியின் பண்ணை வீடு, அலுவலகம்  மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து,  தமிழகம் முழுவதும்  முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில், வேலூரில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 11 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், சென்னையைச் சேர்ந்த இரு நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள்,  நாமக்கல்லில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்யும், பி.எஸ்.கே.பெரியசாமியின் பண்ணை வீடு, அலுவலகம், உறவினர் வீடு உள்ளிட்ட நான்கு இடங்கள், சென்னை, கோவை, சேலம், நாமக்கல்லில் உள்ள 10 - க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
        அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என பலராலும் அழைக்கப்படும், பி.எஸ்.கே. பெரியசாமியின் பண்ணை வீடு,  சேந்தமங்கலம் வட்டம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான நடுக்கோம்பையில் உள்ளது.  அங்கு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.  இந்த இரு இடங்களிலும்  நாள் முழுவதும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல்,  நாமக்கல் - சேலம் சாலையில், பழனியாண்டி தெருவில் உள்ள பெரியசாமியின் உறவினரான ஆர்.பி.எஸ்.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் செல்வகுமார் என்பவரின் வீட்டிலும்   சோதனை நடைபெற்றது.  வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில்,  சனிக்கிழமை காலையில் நாமக்கல் - மோகனூர் சாலையில்,  மகாத்மா காந்தி தெருவில் உள்ள பி.எஸ்.கே.பெரியசாமியின் சம்பந்தி ஒருவரின் வீட்டுக்கு இரு கார்களில் வந்த வருமான வரித் துறையினர்,  வீட்டின் கதவை மூடி சோதனை மேற்கொண்டனர்.  வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.  இதேபோல்,  நடுக்கோம்பையில் உள்ள பெரியசாமியின் பண்ணை வீட்டிலும் சனிக்கிழமை 2-ஆவது நாளாக சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com