3 -ஆவது நாளாக தொடர்ந்த வருமான வரித் துறை சோதனை

நாமக்கல்லில், அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமியின் உறவினர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.


நாமக்கல்லில், அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமியின் உறவினர் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை 3-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 11 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இதில், சென்னையைச் சேர்ந்த இரு நிதி நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள்,   நாமக்கல்லைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பி.எஸ்.கே.பெரியசாமியின் வீடு,  அலுவலகம், உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் 10 - க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
    அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்பதால்,  பி.எஸ்.கே. பெரியசாமியின் பண்ணை வீடு அமைந்துள்ள கொல்லிமலை அடிவாரப் பகுதியான நடுக்கோம்பையில் இரு நாள்களாக சோதனை  நீடித்தது.  அங்கேயே அலுவலகமும் செயல்பட்டு வருவதால்,  இரு பிரிவுகளாக அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.  அங்கிருந்தவர்களிடம் காலை முதல் இரவு வரையில் விசாரணை நடைபெற்றது.  இதையடுத்து,  இரண்டாவது நாளாக சனிக்கிழமை,   நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.கே.பெரியசாமியின் உறவினர் சண்முகம் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
இதேபோல்,  நாமக்கல் - சேலம் சாலையில், பழனியாண்டி தெருவில் உள்ள பெரியசாமியின் உறவினரான  செல்வகுமார் என்பவருடைய வீட்டில், வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.  அதற்கு பிறகு  ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அங்கு சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. நாமக்கல்லில் பி.எஸ்.கே.பெரியசாமியின் வீடு,  அலுவலகம் மற்றும் உறவினர் வீடுகளில் தொடர்ந்து நீடிக்கும் வருமான வரித் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com