சுடச்சுட

  

  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு: ஆட்சியர்

  By DIN  |   Published on : 16th April 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. பொதுப் பார்வையாளர் வாணிமோகன் முன்னிலை வகித்தார்.
  இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது; மண்டல வாரியாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளான வியாழக்கிழமையன்று அதிக வாக்காளர்கள் நிரம்பிய இடத்தில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மண்டல அலுவலர்கள் நடத்திட
  வேண்டும். 
  அதேபோல், வாக்குச்சாவடி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்றவுடன் வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரம் ஆகியவற்றை இணைத்து சரியாக இயங்குகிறதா என பார்வையிட வேண்டும். இயந்திரங்களில் பழுது இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாற்ற வேண்டும். மேலும், மறுநாள் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
  ஒவ்வோர் அலுவலர்களும் தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டல அலுவலர்கள் செய்திட வேண்டும். அன்று இரவில் அதிகபட்சம் 5 மணி நேரம் மட்டுமே உறங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். எக்காரணத்தைக் கொண்டும் தாமதிக்காமல் வாக்குப் பதிவை தொடங்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, வாக்குச் சாவடியின் மொத்த வாக்குகள் எவ்வளவு, பதிவான வாக்குகள் எவ்வளவு என்பதை சதவீத அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திட வேண்டும். சரியான முறையில் திட்டமிட்டு எவ்வித பிரச்னையுமின்றி தேர்தலை நடத்திட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
  பொதுப் பார்வையாளர் வாணிமோகன் பேசியது: தேர்தல் எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் நடந்தால் தான் நமக்கு வெற்றியாகும். மண்டல அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் தான் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்துக்கும் பொறுப்பு. ஏற்கெனவே தேர்தல் பணியில் அனுபவம் இருந்தாலும், அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. வாக்குச் சாவடியில் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai