சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, நாமக்கல் தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. 
  தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு, வியாழக்கிழமை (ஏப். 18) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி நிறைவடைந்தது. 27-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 28, 29-இல் திரும்பப் பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
  நாமக்கல் மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில், அதிமுக, கொமதேக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 29 வாக்காளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மு.ஆசியா மரியம் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் பிரசாரம் ஓய்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சைகளும் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். 
  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் மற்றும் அரசியல் கட்சி பேச்சாளர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள் பிரசாரத்துக்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு வந்து சென்றனர். 
  நாமக்கல் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.காளியப்பன், கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மேல் நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் தங்களுடைய கட்சிக் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்று நாமக்கல் பூங்கா சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். 
  தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai