Enable Javscript for better performance
நாமக்கல் தொகுதியில் வேட்பாளர்கள் பிரசாரம் நிறைவு- Dinamani

சுடச்சுட

  


   நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
  தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 18) நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி, கடந்த மாதம் 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 26-ஆம் தேதி முடிவுற்றது. 27-இல் மனுக்கள் மீதான பரிசீலனையும், 28, 29-இல் திரும்பப் பெறுவதற்கான காலஅவகாசமும் அளிக்கப்பட்டு, 29-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  நாமக்கல் மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில் 36 பேர் மனுதாக்கல் செய்த நிலையில், 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேச்சை ஒருவர் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். தற்போது 29 பேர் களத்தில்உள்ளனர். 
  அதிமுக சார்பில்...
  அதிமுக சார்பில் டிஎல்எஸ் என்ற பி.காளியப்பன் போட்டியிடுகிறார். மார்ச் 22-இல் வேட்புமனு தாக்கல் செய்த அவர் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் வெ.சரோஜா மற்றும் அதிமுக சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள், மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதியிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக இளைஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். செவ்வாய்க்கிழமை ராமாபுரம்புதூர், நாமக்கல் நகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மாலை 5 மணிக்கு மேல் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கடைவீதி, பரமத்தி சாலை, நரசிம்மர் சந்நிதி சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு அருகில் பிரசாரத்தை முடித்தார்.
  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்...
  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ், மார்ச் 22-இல் மனுதாக்கல் செய்தார். அன்று முதல் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். கிராமங்கள் வாரியாக பட்டியலிட்டு, நாள்தோறும் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு மக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலர் இராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், கொமதேக பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து வாக்குச் சேகரித்தனர்.
  இவர், நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து கட்சியினருடன் கடைவீதி, பூங்கா சாலை வழியே ஊர்வலமாக சென்று மாலை 6 மணிக்கு உழவர்சந்தை அருகில் பிரசாரத்தை முடித்தார்.
  அமமுக சார்பில்...
  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பி.பி.சாமிநாதனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வாக்குச் சேகரித்தார். மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
  இவர்களைத் தவிர, சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை நிறுவனர் என்.கே.எஸ்.சக்திவேல், தனது ஆதரவாளர்களுடன் ஒரு மாதமாக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சேகரித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.பாஸ்கரன், நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். 
  இந்திய கணசங்க கட்சி வேட்பாளர் பேராசிரியர் முத்துசாமி, நேதாஜி மக்கள் இயக்கத்தைச் சார்ந்த மு.நடராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து மக்களிடையே வாக்குச் சேகரித்தனர். இவர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai