ரூ.2 ஆயிரம் கோடியில் புதிய நான்கு வழிச் சாலைகள்: அமைச்சர் பி.தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் புதிய நான்கு வழிச் சாலைகள் அமைக்க ஒப்புதல் கிடைத்து விட்டது.  தேர்தலுக்கு பின் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அமைச்சர்


நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் புதிய நான்கு வழிச் சாலைகள் அமைக்க ஒப்புதல் கிடைத்து விட்டது.  தேர்தலுக்கு பின் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பிரசார நிறைவு பொதுக் கூட்டம், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.  இதில், அதிமுக வேட்பாளர் பி.காளியப்பனை ஆதரித்து,  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியது:  
தமிழகத்தில், முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.  சாதாரண விவசாயி, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். இரண்டு மாதத்தில் ஆட்சி போய்விடும் என்றனர்.  ஆனால், 2 ஆண்டுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் இந்த ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 
நாங்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறோம்.  திமுகவில் எதைச் சொல்லி வாக்கு கேட்பார்கள்.  2006 முதல் 2011 வரையில் ஆட்சியில் இருந்தபோது, நாமக்கல் மக்களுக்கு ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றினார்களா?  ஆனால், அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தியது நாமக்கல்லில் தான்.  நாமக்கல்-திருச்செங்கோடு சாலை நான்கு வழிச்சாலையாக முதலில் அமல்படுத்தப்பட்டது.  அதன்பின்  நாமக்கல்-மோகனூர் சாலை, திருச்செங்கோடு-ராசிபுரம் சாலைகள் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.  ரூ.150 கோடியில் நாமக்கல் நகராட்சிக்கென தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இன்னும் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.  அதுமட்டுமின்றி,  எட்டு ஆண்டுகளில் நான்கு வட்டாட்சியர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் மட்டும் தான் சாதாரணத் தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும்.   திமுகவிடம் இயக்கத்தை அடகு வைத்து தேர்தலில் கொமதேக போட்டியிடுகிறது.  மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என ராகுல் காந்தி கர்நாடகத்தில் பேசுகிறார்.  தமிழகத்தில் கட்ட விடமாட்டோம் என்கிறார்.  இங்கு கூட்டணியாக உள்ள காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் கேரளத்தில் எதிரும், புதிருமாக உள்ளனர்.  மத்தியில் நிலையான ஆட்சி அமையவும், தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறவும் பிரதமராக மோடி வரவேண்டும். ரூ.60 ஆயிரம் கோடியில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 
நாமக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலை, நாமக்கல்-ராசிபுரம்-சேலம் வழியாக நான்கு வழிச்சாலை, திருச்செங்கோடு-ஓமலூர் நான்கு வழிச்சாலை ரூ.2 ஆயிரம் கோடியில் அமையவுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்து விட்டது.  தேர்தலுக்குப் பின் அதற்கான பணிகள் தொடங்கும்.  மோகனூர்-பரமத்தி வேலூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.  அடுத்தாண்டு நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமையும். மேலும், தேர்தலுக்கு பின் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைப் பெற அதிமுகவை ஆதரியுங்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com