மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் முதலிடம் பிடித்த நாமக்கல்!

 மக்களவைத் தேர்தலில், 79.93 சதவீத வாக்குப்பதிவு  பெற்று நாமக்கல் மக்களவைத் தொகுதி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்


 மக்களவைத் தேர்தலில், 79.93 சதவீத வாக்குப்பதிவு  பெற்று நாமக்கல் மக்களவைத் தொகுதி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர் விடுமுறை, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக இருக்கலாம் என்று நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி தெரிவித்தார்.
தமிழகம்,  புதுச்சேரியில் கடந்த வியாழக்கிழமை (ஏப்.18) இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. வேலூர் தொகுதியை தவிர்த்து, தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்,  நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 79.93 சதவீதம் வாக்குகள் பதிவாகி முதலிடத்தைப் பிடித்தது. 
இத் தொகுதியில்,  5,55,803 ஆண் வாக்காளர்கள்,  5,73,764 பெண் வாக்காளர்கள், 43 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11,29,610 பேர் வாக்களித்துள்ளனர். 1,39,444 ஆண்கள், 1,44,124 பெண்கள், 68 மூன்றாம் பாலினத்தவர் என 2,83,636 பேர் வாக்களிக்கவில்லை. ஆண்களை காட்டிலும், பெண்கள் 4,680 பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, நாமக்கல் தொகுதியில் 79.64 சதவீத வாக்குகள் பதிவானது. இத்தேர்தலில், புள்ளி 29 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலானாலும், மக்களவைத் தேர்தலானாலும் நாமக்கல் தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதைக் கடந்த கால தேர்தல்கள் மூலம் அறியலாம். தற்போதைய தேர்தலின்போது 100 சதவீத இலக்கை நோக்கி, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினரும், தன்னார்வலர்களும், மாணவ, மாணவியரும், செவிலியர் கல்லூரியைச் சார்ந்தவர்களும், இரண்டு மாதங்களாக பேரணி, துண்டுப் பிரசுரம் விநியோகம்,  கைரேகை அச்சிடுதல், கையெழுத்து இயக்கம் போன்றவற்றை மேற்கொண்டனர். தேர்தல் ஆணையம் வெளியிட்ட குறும்படம், திரையுலக பிரபலங்களின் பேட்டிகள், விழிப்புணர்வு பாடல்கள் உள்ளிட்டவை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன திரை ஒளிபரப்பு வாகனம் மூலம் கிராமம் வாரியாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது போன்ற நடவடிக்கைகள், பிற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், தேர்தலில் வாக்களிப்பதை உணர்வுப் பூர்வமாக மக்கள் கருதியதே வாக்குப்பதிவு அதிகரிக்கக் காரணம் என அரசியல் கட்சியினர், தன்னார்வலர்களின் கருத்து.
இது தொடர்பாக, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், சார்-ஆட்சியருமான சு.கிராந்திகுமார் பதி கூறியது: வாக்குப்பதிவு அதிகரிக்க அனைவரது ஒத்துழைப்பும் தான் காரணம். மேலும், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில், எந்த இடத்திலும் தடங்கலின்றி நடைபெற்றதால் மக்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் வாக்களித்தனர்.  
இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரங்கள், முக்கிய பகுதிகளில் நடைபெற்ற மனிதச் சங்கிலி, சைக்கிள் பேரணி, கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவையும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பதற்கான காரணங்கள். வாக்காளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களும், விழிப்புணர்வு சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்களும், நாமக்கல் தொகுதி முதலிடத்தை பிடிப்பதற்கு காரணமானவர்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com