விவசாயி வெட்டிக் கொலை
By DIN | Published On : 21st April 2019 05:41 AM | Last Updated : 21st April 2019 05:41 AM | அ+அ அ- |

நிலத்தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலை வட்டத்தில் உள்ள திருப்புளிநாடு ஊராட்சியைச் சேர்ந்தவர் கனகராஜ் (47). இவருக்கு மஞ்சுளா (42) என்ற மனைவியும், நல்லரசு, கஜேந்திரன், பூபதி என்ற மகன்களும் உள்ளனர். கனகராஜின் தம்பி பழனிவேல் முருகன்(35). இவரது மனைவி சாந்தி (31). இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
சகோதரர்களுக்கிடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலத்தில் உள்ள வரப்புத் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து, அன்று இரவு கனகராஜ் ஆவேசம் அடைந்து, பழனிவேல்முருகனின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சாந்தியை கத்தியால் வெட்டினாராம். இதனைத் தடுக்க வந்த பழனிவேல்முருகனையும் வெட்டினாராம்., இதைத் தொடர்ந்து, தம்பதி சேர்ந்து கனகராஜை வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த கனகராஜை வாழவந்திநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். காயமடைந்த பழனிவேல் முருகன், மனைவி சாந்தி ஆகிய 2 பேரும் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வாழவந்திநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.