Enable Javscript for better performance
மே 5-இல் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மே 5-இல் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

    By DIN  |   Published On : 25th April 2019 03:01 AM  |   Last Updated : 25th April 2019 03:01 AM  |  அ+அ அ-  |  

    நாமக்கல்  தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தேர்தல் மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது.  அதற்கான வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  வியாழக்கிழமை பிற்பகலுடன் மனு தாக்கல் நிறைவு பெறுவதால், சங்க உறுப்பினர்கள் ஆர்வமுடன் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.
        கடந்த 1970 -ஆம் ஆண்டு நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.  தற்போது நாமக்கல் -  சேலம் சாலையில் செயல்பட்டு வரும் இச் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும்.  இச் சங்கத்தில் மொத்தம் 4,792  பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  தற்போது தலைவராக ஆர்.வாங்கிலி, செயலாளராக கே.அருள்,  பொருளாளராக பி.சீரங்கன் மற்றும் நிர்வாகிகள் பதவி வகித்து வருகின்றனர். 
          இச் சங்கத்துக்கு 2018 -2021-ஆம் ஆண்டுக்கான  11-ஆவது நிர்வாகிகள் தேர்தல்,  கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும்.  ஏற்கெனவே சங்கத் தலைவராக இருந்த கே.எல்.எஸ்.நல்லதம்பி,  சங்க விதிகளை மீறிச் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.  அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்,  தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
         இந்த வழக்கு விசாரணையால் தேர்தல் நடத்துவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.  இந்த நிலையில்,  நல்லதம்பியை நீக்கியது செல்லாது, அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக,  உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய சங்க நிர்வாகிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.  அந்த வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது.  இந்தச் சூழலில் தேர்தல் தேதியை அறிவித்து, அதற்கான  குழுவையும் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம் நியமித்துள்ளது.  
           மே - 5 இல் நடைபெறும் தேர்தலையொட்டி,  சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.23) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு தாக்கல் நடைபெற்றது.  முதல் நாள் அதிகம் மனுக்கள் தாக்கலாகாத நிலையில், புதன்கிழமை மனுத் தாக்கல் விறுவிறுப்படைந்தது.  இந்த நிலையில், மனுத் தாக்கல் வியாழக்கிழமை (ஏப்.25) நிறைவடைகிறது. அன்று மாலை 6 மணியளவில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.  சனிக்கிழமை வேட்பு மனு வாபஸ் பெறுதலும்,  இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.  மே 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.  அன்று மாலை 6 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
          இந்தத் தேர்தலில், தலைவர், உப தலைவர்,  செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 50 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.  செயற்குழு உறுப்பினர் பதவிக்கு வாக்குப் பதிவு கிடையாது.  ஆனால், இம்முறை ஓர் உறுப்பினர், தலைவர், உப தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளருக்கு வாக்களிப்பதுடன்,  50 செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஒவ்வோர் உறுப்பினரும்  வாக்களிக்க வேண்டும். 
         இதற்காக தாலுகா சங்கத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.  நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தில் எப்போதும் இல்லாத வகையில் வாங்கிலி,  நல்லதம்பி இரு தரப்பினரிடையே போட்டி நிலவுகிறது.   வாங்கிலி தரப்பில் தற்போதுள்ளவர்களே போட்டியிடுகின்றனர்.  நல்லதம்பி தரப்பில், தலைவர் பதவிக்கு வி.எஸ்.டி.சேகர்,  செயலாளர் ஆர்.கே.ரவி, பொருளாளர் வி.கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.  இரு தரப்பும் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில்,  ஒவ்வோர் உறுப்பினர் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்க அலுவலகத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp