கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.  
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இந்த விழாவைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள்  திரண்டு வந்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டம்,  கொல்லிமலையில்  ஆண்டுதோறும்,  ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 2,  3  ஆகிய தேதிகளில்,   வல்வில் ஓரி விழா,  சுற்றுலா விழா, மலர்க்  கண்காட்சி ஆகியவை நடைபெற்று வருகின்றன.  அதன்படி, நிகழாண்டுக்கான விழா வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. முதலாவதாக, கொல்லிமலை செம்மேடு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் திறந்து வைத்தார்.   சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்த மலர்க் கண்காட்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில்,  தாவரவியல் பூங்காவில் மலர்கள், காய்கனிகளைக் கொண்டு சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.  மேலும்,  வாசனை திரவியங்கள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

    கொல்லிமலையில்  விளையும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு, பெண்  ஒருவர் வரவேற்கும் விதமாக கைகூப்பி நின்றபடி,    5 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில்,  மிளகு 3 கிலோ,  பூண்டு  4 கிலோ, ஏலக்காய் அரை கிலோ, கிராம்பு அரை கிலோ,  வெந்தயம்  ஒரு கிலோ,  மஞ்சள் ஒரு கிலோ, கொத்தமல்லி விதை ஒரு கிலோ,   பிரியாணி இலை கால் கிலோ மற்றும் கசகசா, பெருஞ்சீரகம், ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், மலர்களைக் காட்சிப்படுத்தும் விதமாக கொய்மலர்கள், 27  கார்னேஷன் ஜெர்பரா ரோஜா  ஆகிய மலர்களை கொண்டு இதய வடிவிலான இரு, மலர்க் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி,  பல வண்ண மலர்களைப் பயன்படுத்தி மலர்க் கோலம் தாவரவியல் பூங்காவின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது.  

மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சிக்கன விழிப்புணர்வை,  விவசாயிகள்,  பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் நீர் மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு விதமான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஈபிள் கோபுரம் போன்று  ஆறடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அமைப்பதற்கு பலாப்பழம் 30,  அன்னாசி  70,  ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி தலா 25, எலுமிச்சை 200, கொய்யாப்பழம் 100, மாம்பழம் 75 மற்றும் பேரிக்காய்,  கருப்பு,  பச்சைத் திராட்சை ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பல வண்ண மலர்களைக் கொண்டு, தாவரவியல் பூங்காவில் மலர் வளைவு அமைக்கப்பட்டிருந்தது.  இந்த மலர்க் கண்காட்சியை,  கொல்லிமலைப் பகுதி மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்திலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன்,  மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனா,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி,   சார் -ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் பாலமுருகன் உள்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com