கோழிப் பண்ணையாளர்களுக்கு வங்கிகள் கடனுதவி அளிக்க வலியுறுத்தல்

நெருக்கடியில் உள்ள கோழிப் பண்ணைத் தொழிலை காப்பாற்ற பண்ணையாளர்களுக்கு, வங்கிகள் கடனுதவி  அளிக்க

நெருக்கடியில் உள்ள கோழிப் பண்ணைத் தொழிலை காப்பாற்ற பண்ணையாளர்களுக்கு, வங்கிகள் கடனுதவி  அளிக்க வேண்டும். அது தொடர்பாகக் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. கோழித் தீவனத்துக்குத் தேவையான மூலப் பொருள்களின் விளைச்சல் குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கோழித் தீவனத்துக்குத் தேவைப்படும் மக்காச்சோளம், கோதுமை, அரிசிக்குருணை போன்றவற்றை வட மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையோ  60 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. இதனால் பண்ணையாளர்கள் போதிய அளவில் தீவனம் கொள்முதல் செய்ய முடியாமல் பணப் பற்றாக்குறையில் தவிக்கின்றனர்.  
வங்கிகளில் கடன் பெற்று பண்ணைகளை நடத்தி வரும் கோழிப் பண்ணையாளர்களுக்கு, அந்த வங்கிகள் தான் தேவையான அளவில் கடன் கொடுத்து உதவ வேண்டும். 2006-ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது வங்கிகள் தான் கடன் கொடுத்து பெரிய அளவில் உதவி புரிந்தன. பண்ணையாளர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தினர்.
தற்போதைய  சூழலில், வங்கிகளில் பண்ணையாளர்கள் வைத்திருக்கும் குறுகியக் காலக் கடனை நீட்டித்து, நீண்ட காலக் கடனாக  மாற்றம் செய்து கூடுதல் நிதி வழங்க வங்கிகள் அனைத்தும் முன்வர வேண்டும். அப்போது தான் இந்தத் தொழிலை காப்பாற்ற முடியும். கோழிப்பண்ணையாளர்கள் நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து, வங்கிகள் உடனடியாக  கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதில், குறைகளை கேட்டு கோழிப் பண்ணைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் நிதியுதவி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com