முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ஆடிப் பெருக்கு: காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்
By DIN | Published On : 04th August 2019 05:01 AM | Last Updated : 04th August 2019 05:01 AM | அ+அ அ- |

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி கோயில்களில்வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் பண்டிகைகளில் முக்கியமானது ஆடி 18-ஆம் பெருக்கு. இது மகாபாரதப் போர் நடந்த காலம் என்றும், ஆடிப் பெருக்கன்று போர் நிறைவு பெற்றதாகவும், அதனால் இந்நாளை பொதுமக்கள் பல்வேறு வகையாக கொண்டாடி மகிழ்வர் என்ற கருத்தும் உண்டு. அதுமட்டுமின்றி, ஆடிப் பெருக்கு நாளில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியர், காவிரி ஆற்றில் புனித நீராடி, தாலிக் கயிற்றை மாற்றிக்கட்டி, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்வர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காவிரி ஆற்றில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் வழிபாடு மேற்கொள்வர்.
அந்த வகையில் சனிக்கிழமை ஆடிப் பெருக்கு பண்டிகையையொட்டி, மோகனூர், பரமத்திவேலுர், பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட காவிரி ஆற்றுப் படுகைகளில் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடி மகிழ்ந்தனர். காவிரியில் தண்ணீர் குறைந்த அளவில் சென்ற போதும் நீராடினர். சிவாலயங்களிலும், அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மேலும், சுற்றுலாத்தலமான கொல்லிமலைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. வல்வில் ஓரி விழா நடைபெறுவதால் அங்கு மலர்க் கண்காட்சியைப் பார்வையிட்டும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்தும், அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் வழிபாடும் செய்தனர். வாகனங்கள் அதிகளவில் வந்ததால், காரவள்ளி - கொல்லிமலை இடையேயான மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் அவற்றை சீரமைத்தனர். மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றங்கரைகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் காலை முதல் இரவு வரை மக்கள் குவிந்த
வண்ணமிருந்தனர்.
பரமத்தி வேலூரில்
பரமத்தி வேலூரில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் காவிரி ஆற்றில் புனித நீராடியும், பூஜைகள் செய்தும், தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலய பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடினார். வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த முளைப்பாரியை வைத்தும், பழங்கள், பூ, மஞ்சள் மற்றும் துணிகளை வைத்து விநாயகருக்கு படையிலிட்டனர். பின்னர் கன்னி தெய்வத்துக்கும், காவிரித் தாய்க்கும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பூஜையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறை புதுமணத் தம்பதியினரும், கன்னிப்பெண்களும் கட்டிக் கொன்டனர். பின்னர் கன்னிப் பெண்களுக்கு புடவை, துணி மணிகளை வழங்கினர். பிற்பகல் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது குல தெய்வ கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சபாண்டவர்கள், கெளரவர்கள் போல் வேடமணிந்து மகாபாரத கதைகளைப் பாடி, கதையில் போரில் பயன்படுத்திய ஆயுதங்களையும், கோயில்களில் உள்ள ஆயுதங்களையும் காவிரியாற்றுக்கு எடுத்து வந்து சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்கள், கோயில் கருவறையில் உள்ள பொருள்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும்கூடியிருந்தனர்.