முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பேனர்கள் அகற்றப்பட்டதைக் கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th August 2019 05:09 AM | Last Updated : 04th August 2019 05:09 AM | அ+அ அ- |

ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கட்சி பேனர்கள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றம் செய்யப்பட்டன. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமையில் நகராட்சி முன்பாக பல்வேறு கட்சியினரும் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தேமுதிக நகரச் செயலர் அ.இளையராஜா, நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்று நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.