ஈரான் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள பொறியாளரை மீட்க நடவடிக்கை: அமைச்சர் பி.தங்கமணி

ஈரான் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள,  திருச்செங்கோடு  பொறியாளரை  மீட்பதற்கு துரித நடவடிக்கை

ஈரான் கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள,  திருச்செங்கோடு  பொறியாளரை  மீட்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி  ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பொருளாதாரத்   தடையை மீறி,  ஈரான் நாட்டில் இருந்து சிரியாவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பலை,  இங்கிலாந்து ராணுவம்  ஜிப்ரால்டர் கடல் பகுதியில் ஜூலை 4-ஆம் தேதி சிறை பிடித்தது.   கிரேஸ் - 1 என்ற அந்த ஈரான் எண்ணெய்க் கப்பலில்,  நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் நவீன்குமார் (28)  மூன்றாம் நிலைப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.   அந்த கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது மகனை மீட்டுத் தரக்கோரி  அவரது பெற்றோர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முதல்வர் அறிவுறுத்தலின்பேரில்,   மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  திருச்செங்கோடு தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் பொறியாளர்  நவீன்குமார் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று, அவரது பெற்றோருக்கு  ஆறுதல் கூறினர்.  அவரை விடுவிப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.  
     தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி கூறியது:   ஈரான் கப்பலில் திருச்செங்கோடு பொறியாளர் சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து அண்மையில்தான் தெரியவந்தது.  அவரது பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில்  ஆறுதலும்,   நம்பிக்கையும் தெரிவித்துள்ளோம்.  
அவரது பெற்றோர்  கோரிக்கையை அடுத்து நவீன்குமாரை மீட்பதற்கான நடவடிக்கையை  முதல்வர் திங்கள்கிழமை  மேற்கொள்வார்.  நிச்சயமாக, நவீன்குமாரை மீட்டு வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான கடமையை மேற்கொள்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com