வீடுகளில் கொள்ளையடிக்கத்  திட்டம்: திரைப்பட இயக்குநர் உள்பட 5 பேர் கைது

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம்  அருகே வீடுகளில் கொள்ளையடிக்கத்  திட்டமிட்டதாக  திரைப்பட இயக்குநர் உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.  

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம்  அருகே வீடுகளில் கொள்ளையடிக்கத்  திட்டமிட்டதாக  திரைப்பட இயக்குநர் உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை  கைது செய்தனர்.  
நாமகிரிப்பேட்டை   காவல் நிலைய ஆய்வாளர் த.இளங்கோ தலைமையில்,  நாமகிரிப்பேட்டை - ஆத்தூர் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது,  மூலப்பள்ளிப்பட்டி பிரிவு பாதை  அருகே   5 பேர் காரில்  இருந்து இறங்கி பேசிக் கொண்டிருந்தனராம்.  அப்போது அங்கு சென்று விசாரணை நடத்திய போலீஸாருக்கு  அவர்கள் மீது சந்தேகம் ஏற்படவே தீவிரமாக விசாரித்துள்ளனர்.   அப்போது  அவர்கள் அனைவரும் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து போலீஸார்,  அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.   இதில் காரில் இருந்தவர்கள்  தண்ணீர்பந்தல்காடு,  ராஜாகவுண்டர் மகன் கார் ஒட்டுநரான ரவி (எ) ரவிக்குமார் (52),    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி முத்தனாம்பட்டி பொம்மை சுவாமி கோயில் தெரு, பகுதியைச் சேர்ந்த முத்து  மகன் திரைப்பட இயக்குநர் பாண்டி  (எ) பாண்டியன் (32),   பெரம்பலூர் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த செங்கான்  மகன் சமையல்காரர் விஜயகுமார்  (42),   திருச்சியைச்  சேர்ந்த  தங்கவேல்  மகன் தவசி  (எ)  தவனேஸ்வரன் (49),  காஞ்சிபுரம் ஊரப்பாக்கம்  அஞ்சுகம் நகரைச்  சேர்ந்த பிரபாகரன் மகன் பிரதீப் சரண் (29)  ஆகியோர் என்பதும் தெரியவந்தது.   அவர்கள் வைத்திருந்த  ஆயுதங்கள் மற்றும்  கார் பறிமுதல் செய்யப்பட்டன. 
அவர்களைப்  பிடித்து விசாரணை நடத்தியதில் பாண்டி (எ) பாண்டியன் பஞ்சம்தாங்கி  என்ற திரைப்படம் தயாரித்து, இயக்கி வருகிறார் என்பதும்,   அந்தப் படத்தைத்  தயாரித்திட  பணம் இல்லாததால், நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் வசதி படைத்த வீடுகளைத் தேடி கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து,  பிடிபட்ட 5 பேரையும்  நாமகிரிப்பேட்டை போலீஸார் கைது செய்து,  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தியதன்  பேரில்,   அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  மேலும்,  இந்தச் சம்பவம் குறித்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com