கொலை, கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட கும்பல் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் கொலை, கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் கொலை, கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, ஒரே கும்பலைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மகன், வழக்குரைஞர், திரைப்பட தயாரிப்பாளர் உள்பட சுமார் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 நாமகிரிப்பேட்டை-ஆத்தூர் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, மூலப்பள்ளிப்பட்டி பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமாக காரில் சுற்றித்திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் ஏற்கெனவே ஆள்கடத்தல், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், இதில் பஞ்சம்தாங்கி என்ற திரைப்படத்தை தயாரித்து வந்த பாண்டி (எ) பாண்டியன் உள்ளிட்டோர் இந்த கும்பலில் இருந்தது தெரியவந்தது.
 வழக்குரைஞர் கைது: இதே போல், பேளுக்குறிச்சி பகுதியில் கொள்ளையடிக்க முயன்றதாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த சென்னை ஏர்ணாவூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (40), திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (39), லால்குடி ஆதிகுடி ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதி ராஜா (எ) கலைப்புலிராஜா (25), திருச்சி காட்டூர் வடக்குபிள்ளையார் கோயில் தெரு தமிழ் (எ) தமிழரசன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனப்பன் முதல் தெரு குருநாதன் (39), ஸ்ரீரங்கம் ராஜா (எ) வாஞ்சி ஈஸ்வரன் (42) ஆகியோரும் பேளுக்குறிச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 இதில் நாமகிரிப்பேட்டை பகுதியில் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் சரண் வழக்குரைஞர் என்பதும், பேளுக்குறிச்சி பகுதியில் கைது செய்யப்பட்ட ராஜா (எ) வாஞ்சி ஈஸ்வரன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 இவர்கள் நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி பகுதியில் கொலை, கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டதும், பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் இவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
 ராசிபுரம் போலீஸார் வேறு ஒரு குற்றவழக்கில் குற்றவாளி ஒருவரிடம் விசாரணை நடத்திய போது, இதுகுறித்து தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலை கைது செய்த ராசிபுரம் காவல் துறை ஆய்வாளர் செல்லமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாரை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அர.அருளரசு பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com