சுடச்சுட

  

  துருப்பிடித்த தகவல் பலகை: சுற்றுலா பயணிகள் தடுமாற்றம்

  By DIN  |   Published on : 15th August 2019 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொல்லிமலை அடிவாரப் பகுதியில் உள்ள தகவல் பலகை, துருப்பிடித்த நிலையில் இருப்பதால், சுற்றுலா பயணிகள் தடுமாற்றமடையும் சூழல் உள்ளது.
  நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான கொல்லிமலைக்கு, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
  கொல்லிமலையில் காண வேண்டிய இடங்கள் என்ற அடிப்படையில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், வாசலூர்பட்டி படகு குழாம், வியூ பாயிண்ட் உள்ளிட்டவை குறித்தும், எத்தனை கிலோ மீட்டர், எவ்வாறு செல்வது போன்ற தகவல்கள் அடங்கிய பலகை, சுற்றுலாத் துறை சார்பில் 20 ஆண்டுகளுக்கு முன் மலையின் அடிவாரப் பகுதியில் வைக்கப்பட்டது.
  மழை, வெயிலால், அந்த தகவல் பலகை துருப்பிடித்து மோசமான நிலையில் தற்போது காட்சியளிக்கிறது.  கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளியைக் கடந்து கொண்டை ஊசி வளைவுப் பகுதியை நெருங்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் பலகையால் வெளியூர் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அண்மையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டபோதும் அந்தப் பலகையானது சீரமைக்கப்படவில்லை.  இந்திய அளவில் தமிழக சுற்றுலாத் துறை முதலிடம் வகிப்பதாக, , நாமக்கல்லில் சில தினங்களுக்கு முன், அத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.  அவ்வாறு புகழ்பெற்ற சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு தடைபோடும் வகையில் உள்ள துருப்பிடித்த தகவல் பலகையை அதிகாரிகள் உடனடியாக அகற்றிவிட்டு,  சுற்றுலாப் பயணிகள் பார்த்து செல்லும் வகையில் புதிய தகவல் பலகை அமைத்திட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai