சோழசிராமணி கதவணை நீர்த்தேக்கப் பாலத்தின் தூண்களுக்கு இடையே போடப்பட்டிருந்த கான்கிரீட் தளம் பெயர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

பரமத்தி வேலூர் வட்டம்,சோழசிராமணியில் உள்ள கதவணை நீர்த்தேக்கத் திட்ட பாலத்தின் 9,10-ஆம் தூண்களுக்கு

பரமத்தி வேலூர் வட்டம்,சோழசிராமணியில் உள்ள கதவணை நீர்த்தேக்கத் திட்ட பாலத்தின் 9,10-ஆம் தூண்களுக்கு இடையே போடப்பட்டிருந்த கான்கிரீட் தளம் பெயர்ந்து போனதால், வாகன ஓட்டிகளும்,கரையோர மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
  நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் வட்டம், சோழசிரமாணி, ஈரோடு மாவட்டம் பாசூரையும் இணைக்கும் வகையிலான காவிரி ஆற்றின் குறுக்கே மின்சாரம் தயாரிப்பதற்கான கதவணை அமைக்கப்பட்டது.  பாலம் கட்ட தொடங்கப்பட்ட போது கதவணைகளின் பராமரிப்புக்காக நடைபாதை மட்டும் 3 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டது.  பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 7 மீட்டராக போக்குவரத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.  2007-ல் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு,  பணிகள் முடிக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு கதவணையில் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.  இப் பாலம் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் நாமக்கல் மற்றும் ஈரோடு இடையே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. 
இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு 3-வது கான்கிரீட் தூணில் பாதிக்கு மேல் அரிப்பு ஏற்பட்டு,  அந்தரத்தில் தொங்குவது போன்று பதிவு சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதனையடுத்து, அப் பகுதி மற்றும் அவ் வழியாகச் சென்றுவரும் பொதுமக்கள் பழுதடைந்துள்ள கதவணைப் பாலத்தை உடனடியாக சீர் செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அமைச்சர் தங்கமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உள்ளிட்டோர் சோழசிராமணி பவானி கட்டளை கதவணை பாலத்தை ஆய்வு செய்து உடனடியாக சீர் செய்யவும்,ஒப்பந்ததாரகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 
     அதன்படி 3-வது கண்பாலம் சீர்செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்ததது.  இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் செவ்வாய்க்கிழமை 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து வைத்தார்.  மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சோழசிராமணி கதவணையை வந்தடைந்தது.  இந்த கதவணையில் இருந்து பாசனத்திற்காக 9 மற்றும் 10-வது கண் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.  9 மற்றும் 10-வது கண் தூண்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போடப்பட்டிருந்த கான்கிரீட் தளம் பெயர்ந்து சிமெண்ட் பூச்சுகள் இல்லாமல் வெறும் கம்பிகள் மட்டும் வெளியே தெரிந்ததால் 9 மற்றும் 10-வது கண் வழியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் அடைக்கப்பட்டு 12,13,14 கண் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    கம்பிகள் மட்டும் வெளியே தெரிந்ததால் பெரும் அபாயம் ஏற்படுமோ என காவிரி கரையேர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.  இது குறித்து தகவல் கேட்பதற்காக பலமுறை மின்உற்பத்தி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை தொடர்ந்து துண்டித்தனர்.  மேலும் இந்த கதவணை மற்றும் பாலத்தை முறையாகப் பராமரிக்காததே இதற்கு காரணம் எனவும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இப் பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com