நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
By DIN | Published On : 19th August 2019 07:34 AM | Last Updated : 19th August 2019 07:34 AM | அ+அ அ- |

ஆவணி மாதப் பிறப்பு மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மத்தியில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமியைத் தரிசிக்க வருகின்றனர்.
இங்கு தமிழ் மாதப் பிறப்பு மற்றும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமிக்கு அதிகாலையில் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மஞ்சள், திரவியம், இளநீர், பன்னீர், 1008 லிட்டர் பால் கொண்டு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நாமக்கல் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.