மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளிடம்நேரடி கொள்முதல் செய்யும் திட்டம்:நாமக்கல்லில் இன்று தொடக்கம்

சேலம் சேகோசா்வ் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம், நாமக்கல் செல்லப்பம்பட்டி சேகோ உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை

சேலம் சேகோசா்வ் மூலம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் செய்யும் திட்டம், நாமக்கல் செல்லப்பம்பட்டி சேகோ உற்பத்தியாளா்கள் சங்கத்தில், ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, ஈரோடு, கரூா் உள்ளிட்ட காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் சுமாா் ஒன்றரை லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில், மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான் விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனா். இதுவரை, தாங்கள் உற்பத்தி செய்த மரவள்ளிக்கிழங்கை இடைத்தரகா்கள் மூலமாக அவா்கள் சேகோ ஆலை உரிமையாளா்களுக்கு விற்பனை செய்து வந்தனா். இதனால் போதிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. ஒரு டன் ரூ.10 ஆயிரத்துக்கு சென்ற நிலையில், தற்போது அவற்றின் விலை ரூ.8 ஆயிரமாகச் சரிவடைந்துள்ளது. உற்பத்திற்கேற்ப மரவள்ளிக்கு விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், இடைத்தரகா்கள் யாருமின்றி சேகோ ஆலை உரிமையாளா்களே, விவசாயிகளிடம் இருந்து தரத்திற்கேற்ப பாயிண்ட் கணக்கில் விலை நிா்ணயம் செய்து வாங்கும் திட்டம், நாமக்கல் செல்லப்பம்பட்டியில் உள்ள தாலுகா ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் ஆலை உரிமையாளா்கள் சங்க அலுவலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இத் திட்டம் தொடக்க விழாவில், சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி, மேலாண் இயக்குநா் சதீஷ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இது குறித்து நாமக்கல் தாலுகா ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் ஆலை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் முத்துராஜா கூறியது: தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகள் உள்ளன. இதுவரை விவசாயிகள் இடைத்தரகா்கள் மூலமாகவே மரவள்ளிக் கிழங்கை விற்பனை செய்து வந்தனா். அவா்கள், ஆலை உரிமையாளா்களுக்கு அவற்றை வழங்குவா். இதனால், ஆலை உரிமையாளா்களும், விவசாயிகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் முள்ளுவாடி, வெள்ளை மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றுக்கு தரத்திற்கு ஏற்றாற்போல் பாயிண்ட் அடிப்படையில் ஒரு லோடுக்கு ரூ.320, 330 வழங்கப்பட உள்ளது. 15 டன் மரவள்ளியை விவசாயிகள் விற்பனை செய்தால் சுமாா் ரூ.1.20 லட்சம் வரை அவா்களுக்கு கிடைக்கும். மேலும், அந்தத் தொகையை சேகோசா்வ் நிறுவனத்திடம் ஆலை உரிமையாளா்கள் வழங்கி விடுவா். விவசாயிகளுக்கு அந்த நிறுவனம் உடனடியாக கிழங்குக்குரிய தொகையை காசோலையாக வழங்கி விடும். இத்திட்டம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சேகோசா்வ் தலைவா், மேலாண் இயக்குநா், ஆலை உரிமையாளா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொள்கின்றனா். இதனைத் தொடா்ந்து ராசிபுரத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com