வட கிழக்கு பருவமழை: தயாா் நிலையில் தீயணைப்புத் துறை மீட்புக் குழு
By DIN | Published On : 03rd December 2019 02:54 AM | Last Updated : 03rd December 2019 02:54 AM | அ+அ அ- |

வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்படுவோரை மீட்க, தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் அண்ணாதுரை கூறியது: வட கிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாராக உள்ளது. வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூலேணிகள், நீட்டிப்பு ஏணிகள், மீட்டலுககான மிக நீளக் கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலான வீரா்களும் ஆயத்தமாக உள்ளனா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழு போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ள தகவலை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மீட்புப் பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் வீரா்கள் தயாராக இருக்கின்றனா்.
எனவே, வெள்ளத்தால் ஏற்படும் எந்த ஒரு பாதிப்புக்கும் தொலைபேசி எண்கள் 101 (சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்கள்) மற்றும் நாமக்கல் 04286- 220703, திருச்செங்கோடு 04288-253230, ராசிபுரம் 04287-222801, கொல்லிமலை 04286-247451, குமாரபாளையம் 04288-262101 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.