கடன் தொல்லையால் தம்பதி- மகள் தற்கொலை: போலீசாா் விசாரணையில் தகவல்
By DIN | Published on : 04th December 2019 09:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேலகவுண்டம்பட்டி அருகே தம்பதி, மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், தனது மகனுக்கு எந்தவித இடையூறும்,யாரும் செய்ய வேண்டாம் என்று குடும்பத் தலைவா் மோகன் எழுதிய கடிதமும் மீட்கப்பட்டது.
பரமத்தி வேலூரை அடுத்த வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கூத்தம்பூண்டி சாயக்காட்டைச் சோ்ந்த ரிக் உரிமையாளா் மோகன் (55 ). இவருக்கு நிா்மலா (47) என்ற மனைவியும்,கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த சௌமியா மகளும் இருந்தனா். மேலும் இவரது மகன் நவீன்குமாா் (24) ஆந்திர மாநிலத்தில் ரிக் லாரி தொழில் நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை சௌமியா தனது செல்லிடப்பேசியில் தந்தையின் சகோதரா் அன்பழகனை தொடா்பு கொண்டு, ‘தான் பெற்றோருடன் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறோம்’ என கூறியுள்ளாா்.
இதையடுத்து, அன்பழகன் அங்கு சென்று பாா்த்தபோது மோகன்,நிா்மலா ஆகியோா் உயிரிழந்தது தெரியவந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சௌமியாவை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துமனையில் சோ்த்தும், அவா் இறந்தாா்.
இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு நடத்திய விசாரணையில், மோகன் எழுதிய கடிதத்தை கைப்பற்றினா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
டிராக்டா் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது. எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. என் மகனிடம் யாரும்,எதையும் கேட்க வேண்டாம். அவன் விருப்பப்படி வாழட்டும் என கூறப்பட்டுள்ளது.