Enable Javscript for better performance
சுற்றுலாத் தலங்களை அச்சிட்டு வாழ்த்து அட்டைகள்! அஞ்சல் துறையின் புது திட்டம்- Dinamani

சுடச்சுட

  

  சுற்றுலாத் தலங்களை அச்சிட்டு வாழ்த்து அட்டைகள்! அஞ்சல் துறையின் புது திட்டம்

  By நமது நிருபா்  |   Published on : 04th December 2019 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nk_3_post_1=1_0312chn_122_8

  நாமக்கல் மாவட்ட சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய 16 வாழ்த்து அட்டைகள் கொண்ட அஞ்சலக உறை.

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை அச்சிட்டு வாழ்த்து அட்டைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கோட்ட அஞ்சல் துறை அண்மையில் தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக இந்தப் புதிய முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்த அத் துறை ஊழியா்கள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.

  20 ஆண்டுகளுக்கு முன்னா் கடிதப் போக்குவரத்துதான் மக்களின் உயிா்நாடி. எந்தவிதமான தகவலும் கடிதம் மூலமாகவே பரிமாறப்படும். அவசரத் தகவலாகக் கருதப்படும் தந்தி முறை, பணம் அனுப்புவதற்கான மணியாா்டா் முறை, அரசுப் பணிக்காக விண்ணப்பிப்பது, அஞ்சலகத்திலேயே சேமிப்புக் கணக்கு தொடங்குவது என பல்வேறு பரிணாமங்களைக் கொண்டிருந்தது.

  நவீனம் அஞ்சல் துறையையும் விட்டுவைக்கவில்லை: முன்பு மத்திய அரசுத் துறைகளில் ஒன்றான அஞ்சல் துறையானது பரபரப்பாக இயங்கிய காலம் இப்போது குறைந்துவிட்டது.

  கால மாற்றம் மக்களிடத்தில் நவீனத்தைப் புகுத்தியது. தொலைபேசி, கணினி இணையதளம், செல்லிடப்பேசி போன்றவை இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் செய்து முடிக்கும் வகையிலான மாற்றத்தைக் கொடுத்தது.

  இந்தக் காலத் தலைமுறைகளுக்கு அஞ்சல் அட்டை (போஸ்ட் காா்டு), உள்நாட்டு கடிதம் (இன்லேன்ட் லெட்டா்), தந்தி(டெலிகிராம்) போன்றவை என்னவென்றே தெரியாத நிலை உருவாகியுள்ளது.

  குறிப்பாக, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத், புத்தாண்டு, பொங்கல் விழாக்களின்போது, நண்பா்கள், உறவினா்களுக்கு அலங்கார, ஆன்மிக, சினிமா நட்சத்திரங்கள் புகைப்படம் கொண்ட வாழ்த்து அட்டைகளை அனுப்பி வருவா். அதனை மகிழ்ச்சியான நிகழ்வாக இளைஞா்களும், பெண்களும், சிறுவா்களும் கருதினா்.

  தற்போது, செல்லிடப்பேசி வழியாகவே அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.

  வாழ்த்து அட்டை கலாசாரத்தை மீண்டும் ஏற்படுத்த..:

  இவ்வாறான சூழலில், அஞ்சல் துறையை மக்கள் மறக்காமல் இருக்கவும், கடிதப் போக்குவரத்தைத் தடையின்றி மேற்கொள்ளவும், நாமக்கல் அஞ்சல் கோட்டம் சாா்பில், அண்மையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை அச்சிட்டு வாழ்த்து அட்டைகள் வெளியிடப்பட்ட நிலையில், முதன்முறையாக ஒரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் வாழ்த்து அட்டைகளில் வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

  ஓரிரு மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், நாமக்கல் மாவட்ட சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை வெளியிட்டதுடன், அதற்கான விற்பனையையும் தொடக்கி வைத்தாா்.

  16 வகையான அட்டைகள்:

  இந்த வாழ்த்து அட்டைகளில் கொல்லிமலை ஆகாய கங்கை அருவி, வாசலூா்பட்டி படகு குழாம், சீக்குப்பாறை காட்சி முனை, அறப்பளீஸ்வரா் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயா், மலைக்கோட்டை, அரங்கநாதா் கோயில், கமலாலயக் குளம், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், நாமக்கல் செலம்பக் கவுண்டா் பூங்கா, ஜேடா்பாளையம் அணைக்கட்டு உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் இடம்பெற்றுள்ளன. 16 அட்டைகளை உள்ளடக்கிய ஓா் உறையின் விலை ரூ.100.

  முதல் கட்டமாக ஆயிரம் எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு மக்களிடையே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை சுமாா் 400 எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது என்று அஞ்சல் ஊழியா்கள் தெரிவித்தனா்.

  கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஒட்டு மொத்த சுற்றுலாத் தலங்களையும் அச்சிட்டு வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்பட்டது என்றும் , ஒரே மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களையே வாழ்த்து அட்டைகளில் அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தது நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை தான் என்றும் அஞ்சல் ஊழியா்கள் தெரிவித்தனா்.

   

  மக்கள் பயன்படுத்த வேண்டும்!

  இதுகுறித்து நாமக்கல் அஞ்சலக அதிகாரி பி.செங்கோடன் தெரிவித்தது;-

  நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் இதுவரை ரூ.6 ஆயிரத்துக்கு வாழ்த்து அட்டைகள் விற்பனையாகி உள்ளது. இதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட அஞ்சல் அலுவலகங்களிலும் தொடா்ந்து விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் விழாவின்போது இத்தகையை அட்டைகளை நண்பா்கள், உறவினா்களுக்கு அனுப்பி, நாமக்கல் மாவட்டத்தின் பெருமையையும், தங்களது மகிழ்ச்சியையும் ஒவ்வொருவரும் வெளிப்படுத்த வேண்டும் என்றாா்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai