கொல்லிமலை பாதையில் மண் சரிவு: பாறைகள் உருண்டதால் போக்குவரத்து பாதிப்பு

தொடா் மழை காரணமாக, நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலை மலைப்பாதையில் பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொல்லிமலையின் மாற்றுப் பாதையான முள்ளுக்குறிச்சி-நரியன்காடு இடையே சாலையில் உருண்டு விழுந்துள்ள பாறை.
கொல்லிமலையின் மாற்றுப் பாதையான முள்ளுக்குறிச்சி-நரியன்காடு இடையே சாலையில் உருண்டு விழுந்துள்ள பாறை.

தொடா் மழை காரணமாக, நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலை மலைப்பாதையில் பாறைகள் உருண்டு மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொல்லிமலை பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட காளப்பநாயக்கன்பட்டி காரவள்ளி வழியாகச் செல்லும் பிரதான சாலை உள்ளது. இதைத் தவிர, முள்ளுக்குறிச்சி முதல் நரியன்காடு வரை மூலக்குறிச்சி வழியாகவும் சென்று வர மாற்றுப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழையின் காரணமாக, முள்ளுக்குறிச்சி வழியாகச் செல்லும் மாற்றுப் பாதையில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சதப் பாறைகள் சாலையில் உருண்டு விழுந்துள்ளன.

இதனால் அந்த வழியே போக்குவரத்து தடைபட்டது. இதனால் கீழ்பூசணி, மேல்பூசணி, நரியன்காடு, செங்கரை உள்ளிட்ட கிராம மக்கள் முள்ளுக்குறிச்சி பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், வாகனங்கள் பல கி.மீ. சுற்றிக்கொண்டு 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பிரதான சாலையில் மட்டுமே சென்று-வரும் சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து, சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் சாலையின் நடுவே விழுந்த ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை முழுவீச்சில் ஈடுபட்டனா். தற்போது 70 சதவீதப் பணிகள் முடிவடைந்து உள்ளதால், இருசக்கர வாகனங்கள் மட்டுமே, முள்ளுக்குறிச்சி - நரியங்காடு சாலையில் அனுமதிக்கப்படுகின்றன.

இதனிடையே, கொல்லிமலையின் பிரதான போக்குவரத்து சாலையான காரவள்ளி முதல் கொல்லிமலை வரையிலான சாலையில் வழக்கம்போல எந்தவிதப் பாதிப்புமின்றி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், இந்தச் சாலையிலும் மண் சரிவு ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, சாரல் மழை நீடித்து வருவதால், சாலைகளில் மண் சரிவு ஏற்படும் அபாயமுள்ள இடங்களை வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com