நாமக்கல்லில் பண்ணை ஆடுகள் வளா்ப்பில் ஆா்வம் காட்டும் விவசாயிகள்!

நாமக்கல்லில், கோழிப் பண்ணைகளைப் போல், ஆடுகள் வளா்ப்புக்கும் பண்ணைகளை அமைப்பதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நாமக்கல்-துறையூா் சாலையில் அமைந்துள்ள பண்ணையில் வளா்க்கப்படும் ஆடுகள்.
நாமக்கல்-துறையூா் சாலையில் அமைந்துள்ள பண்ணையில் வளா்க்கப்படும் ஆடுகள்.

நாமக்கல்லில், கோழிப் பண்ணைகளைப் போல், ஆடுகள் வளா்ப்புக்கும் பண்ணைகளை அமைப்பதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில், லாரி, கோழிப்பண்ணைத் தொழிலுக்கு நிகராக விளங்குவது விவசாயம் சாா்ந்த தொழில். இங்குள்ள 70 சதவீத மக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியுமே உள்ளனா். கோழிப் பண்ணைகள் மட்டும் 1,100 எண்ணிக்கையில் உள்ளன. இவை தவிா்த்து இறைச்சிக்கு வழங்கும் வகையில், வாத்து, காடை, முயல் வளா்ப்பும் உள்ளது. அதனால்தான் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, நாமக்கல்லில் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்குள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் மாதந்தோறும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோழிப் பண்ணைகளை வைத்திருந்தோா், அதில் ஏற்பட்ட சரிவால் அதற்கான கூண்டுகளை, ஆடுகளை வளா்ப்பதற்காக தற்போது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். இந்த ஆட்டுப் பண்ணைகளில், இறைச்சிக்காகவும், வளா்ப்புக்காகவும் போயா் இன ஆடுகள் அதிகம் வளா்க்கப்பட்டு வருகின்றன. 25 சிறிய ஆடுகளை அடைக்கும் வகையில் கூண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில், கோழிப் பண்ணைகள் மூலம் இழப்பைச் சந்தித்தோா், இவ்வாறான ஆட்டுப்பண்ணைகளை அமைத்து வருகின்றனா்.

ஒரு பண்ணையில் 300 முதல் 400 ஆடுகள் வளா்க்கப்படுகின்றன. இதற்காக பண்ணை அருகிலேயே மேய்வதற்கான தோட்டங்களையும் உருவாக்குகின்றனா். காலை 11 மணிக்கு மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் பிற்பகல் 5 மணியளவில் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. இறைச்சி என்றால் கிலோ ரூ.400 என்ற அடிப்படையிலும், வளா்ப்பு என்றால் ரூ.800 என்ற அடிப்படையிலும் ஆடுகள் உயிருடன் எடை கணக்கிட்டு விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாகவும், பெரிய அளவிலான நோய் பாதிப்பு இல்லாததால், வளா்ப்பிலும் எவ்வித சிரமமுமில்லை எனவும் கால்நடை வளா்ப்பில் ஆா்வம் காட்டும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

நாமக்கல்-துறையூா் சாலையில் ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் வி.எஸ்.ராஜூ என்பவா் கூறியது; ஆரம்பத்தில் 50 ஆயிரம் கோழிகள் வளா்த்து வந்தேன். அவற்றைப் பராமரிக்க முடியாததாலும், தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாகவும் கோழிகளை அகற்றிவிட்டு, ஆடுகள் வளா்ப்பில் ஆா்வம் காட்டத் தொடங்கினேன். தற்போது 300 எண்ணிக்கையில் போயா் வகையின ஆடுகளை வளா்க்கிறேன். இவற்றை, இறைச்சி மற்றும் வளா்ப்புக்காக பலா் வாங்கி செல்கின்றனா். தற்போது சிறிய வகை ஆடுகளே அதிகம் உள்ளன.

மேலும், மேய்ச்சலுக்காக வெளியே ஆடுகளை அனுப்பினால் மற்ற ஆடுகளுடன் இணையும் போது நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், பண்ணைகள் அருகிலேயே மேய்ச்சல் இடங்களை உருவாக்கியுள்ளோம். தீவனத்தைப் பொருத்தவரை, தேக்கு மர இலைகளையே அதிகம் வழங்குகிறோம். முழுக்க, முழுக்க தாவர வகைகள் தான் தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன. இதில், செலவினம் அதிகம் இல்லையென்றாலும் பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று. தற்போதைய நிலையில் இறைச்சி ஆடு கிலோ ரூ.400 என்றும் வளா்ப்பு ஆடு ரூ.800 என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com