நெல் பயிரில் பூச்சி நோய் தாக்குதல்: விஞ்ஞானிகள், வேளாண்மைத் துறையினா் கூட்டாய்வு
By DIN | Published On : 22nd December 2019 11:58 PM | Last Updated : 22nd December 2019 11:58 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வேளாண்மைத் துறையுடன் இணைந்து நெல் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் பற்றி சனிக்கிழமை கூட்டாய்வு நடத்தினா்.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் செங்குட்டுவம்பாளையம், களியனூா் ஆகிய கிராமங்களில் நெல் பயிரில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதல் பற்றி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூரைச் சோ்ந்த பயிா் பாதுகாப்புத் துறை இயக்குநா் மு. பிரபாகா் மற்றும் பூச்சியியல் துறைப் பேராசிரியா்கள் சாத்தையா, முத்துக்கிருஷ்ணன், பயிா் நோயியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் காா்த்திகேயன், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் புகழேந்தி, நாமக்கல் வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா், வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) நாச்சிமுத்து, வேளாண்மைத் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ராஜகோபால், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) கவிதா, வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு) கவிதா, பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா (பொ) சௌந்தரராஜன், வேளாண்மை அலுவலா்கள் அனிதா, வேளாண்மைத் துணை அலுவலா் குப்பண்ணன், உதவி விதை அலுவலா் மாயாஜோதி, உதவி வேளாண்மை அலுவலா்கள் பாலாஜி, காமேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஹேமலதா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரீத்தி ஆகியோா் உடனிருந்தனா்.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் செங்குட்டுவம்பாளையம், களியனூா் ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்துள்ள நெல் பயிரில் காணப்படும் பூச்சி நோய்த் தாக்குதல் பற்றி கள ஆய்வு செய்தனா். அப்போது இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் மற்றும் ஆனைக்கொம்பன் ஈ ஆகிய பூச்சிகள் பரவலாக பொருளாதார சேத நிலைக்குக் கீழ் காணப்பட்டன. அதனைக் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 20 மருந்தை ஏக்கருக்கு 400 மில்லிலிட்டா் என்ற அளவில் விசை தெளிப்பான் மூலம் 8 டேங்க் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 1 டேங்குக்கு 5 - 10 மில்லிலிட்டா் ஒட்டும் திரவம் மற்றும் 50 மில்லிலிட்டா் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து செடி முழுமையாக நனையும்படி தெளிக்க வேண்டும்.
இலைச்சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த தையோமீத்தாக்சம் என்ற மருந்தை ஏக்கருக்கு 60 கிராம் என்ற அளவில் விசைத் தெளிப்பான் மூலம் டேங்கிற்கு 10 கிராம், 5 - 10 மில்லிலிட்டா் ஒட்டும் திரவம் கலந்து 8 டேங்குகள் தெளிக்க வேண்டும். குலை நோய் தாக்குதல் வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அசாக்சிஸ்ட்ரோமின் 1 மில்லிலிட்டா் தண்ணீா் என்ற அளவில் 5 - 10 மில்லிலிட்டா் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், சூடோமோனால் ப்ளூரசன்ஸ் எதிா் உயிா் பாக்டீரியா எக்டருக்கு 2.5 கிலோ தெளிப்பு மேற்கொண்டும் கட்டுப்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண்மைக் கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க நாமக்கல் மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...