காய்ந்த கோரை கட்டுக்கு ரூ.1,250 விலை நிர்ணயம்

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் அனைத்து மாவட்ட கோரை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறில் அனைத்து மாவட்ட கோரை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் காய்ந்த கோரை கட்டு ஒன்றுக்கு ரூ.1,050 முதல் ரூ.1,250 வரை விலை நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  
நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கோரை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு  கோரை உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் வையாபுரி வரவேற்றுப் பேசினார். பரமத்தி வேலூர் வட்டத்துக்கு உள்பட்ட வெங்கரை, கருக்கம்பாளையம், நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம்,  குச்சிப்பாளையம், வேலூர் மற்றும் பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கோரைகளை அறுவடை செய்து காயவைத்துக் கட்டுகளாகக் கட்டி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்பட்டுகிறது.  காய்ந்த கோரைக் கட்டுகள் ரூ.1,050 முதல் ரூ.1,750 வரை விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காய்ந்த கோரை கட்டு ஒன்று ரூ.750-ஆக சரிவடைந்துள்ளது. கோரை அறுப்புக் கூலி ரூ.600-ஆக உயந்துள்ளதாலும், உரம் மற்றும் நிலத்தின் குத்தகை தொகை அதிகரித்ததாலும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. காய்ந்த கோரைகளுக்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கோரை விவசாயிகளின் நலன் கருதி அனைத்து மாவட்ட கோரை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் காய்ந்த கோரை கட்டு ஒன்றுக்கு ரூ.1,050 முதல் ரூ.1,250 வரை விலை நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இக் கூட்டத்தில் நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கோரை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com