சுடச்சுட

  

  விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th February 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். 
   விளைநிலங்களுக்கு மத்தியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி,  உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில்,  காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம்   நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட காடச்சநல்லூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  
   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை வைகோ செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்தித்துப் பேசினார்.  இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
  சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் புதுப்புகழுர் வரை 800 கிலோவாட் திறன் கொண்ட மின்சாரம் கொண்டு செல்வதற்கு,  உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள்  விளைநிலங்கள் வழியே தொடங்கப்பட்டுள்ளன.  இதனால் அந்த மின்கோபுரங்களுக்கு கீழே உள்ள பறவைகள்,  விலங்குகள், மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
   ஏற்கெனவே கேரளத்துக்கு 324 கிலோவாட் மின்சாரம் சாலையோரமாக நிலத்துக்கு அடியில்தான் கொண்டு செல்லப்படுகிறது.  ஆனால் தமிழகத்தில் விளைநிலங்களுக்கு மத்தியில் 800 கிலோ வாட் மின்சாரம் உயர்கோபுரத்தில்  கொண்டு செல்வதால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
   உயர் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்வதால், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.9 கோடி செலவாகிறது.  இதில் விவசாயிகளுக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும் என மின் துறை அறிவித்துள்ளது.  இது நடைமுறைப்படுத்த முடியாத திட்டம்.  மேலும்,  உயர் கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதால், மின்இழப்பீடு என்ற பெயரில் ஊழலுக்கு வழிவகுக்கும். 
  இந்தத் திட்டத்தால் விவசாயம் செய்ய முடியாது.  சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  விவசாயம் செய்ய வங்கிக் கடன் கிடைக்காது. விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும்.  எனவே,  இந்தத் திட்டத்தை தமிழக அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.  
    உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துபவர்களை காவல்துறை மிரட்டக் கூடாது. அறவழியில் போராட்டம் நடத்த முதல்வர் அனுமதிக்க வேண்டும். 
   பிரதமர் நரேந்திர மோடி வாராணசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, கடலுக்கடியில் மின்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினார்.  அந்தத் தொழில் நுட்பத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று,  தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai