கெளரவ ஊக்கத்தொகை திட்டம்: பயனாளிகள் தேர்வில் வருவாய், வேளாண் துறையினர் தீவிரம்

மத்திய அரசின் கெளரவ ஊக்கத்தொகை ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான சிறு, குறு விவசாயிகளை

மத்திய அரசின் கெளரவ ஊக்கத்தொகை ரூ.6,000 வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியான சிறு, குறு விவசாயிகளை தேர்வு செய்யும் பணியில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
மத்திய இடைக்கால பட்ஜெட்டில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு கெளரவ ஊக்கத்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று தவணையாக தலா ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் விவரங்களை புள்ளியியல் துறை வருவாய்த்துறை வசம் வழங்கியுள்ளது. இருப்பினும் தகுதியான விவசாயிகளை கண்டறியும் வகையில் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. 
5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள்,  சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக விவரம்,  செல்லிடப்பேசி எண் போன்ற விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும்.  எனவே சிறு, குறு விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதமரின் விவசாயிகள் கெளரவ ஊக்கத்தொகை திட்ட விண்ணப்பத்தில், 23 வகையான விவரங்களை பூர்த்தி செய்து, படிவத்தை வழங்க வேண்டும். முழு விவரங்களை பூர்த்தி செய்து வழங்குவதுடன் என்னால் வழங்கப்பட்ட தகவல்கள் பின்வரும் நாள்களில் தவறானது என கண்டறியப்பட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளித்து கையொப்பமிட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் மார்ச் மாதம் முதல் தவணையாக வங்கிக் கணக்கு மூலமாக ரூ.2,000  வழங்கப்படவுள்ளது. எனவே சிறு, குறு விவசாயிகள் முழு விவரத்துடன் சென்று, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். 
பயனாளிகள் தேர்வில் வருவாய்த்துறை அலுவலர்கள்: 
கெளரவ ஊக்கத்தொகை பெறும் பயனாளிகள் உண்மையாக விவசாயம் செய்பவர்களாக மட்டும் இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயியாக இருந்தாலும் பிற தொழில்கள் மூலம் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால் அத்தகையவர்கள் இந்த ஊக்கத்தொகையை பெற முடியாது என வருவாய்த்துறை அலுவலர்கள்
தெரிவித்தனர். 
மருத்துவர்கள், அரசுப்பணியில் இருப்போர், ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர் இந்த ஊக்கத்தொகயை பெற முடியாது, இத்தகையை வரைமுறைகளுக்கு உள்பட்டு உத்தேச பயனாளிகளை பட்டியல் தயார் செய்யும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் இந்த வாரத்தில் முடிந்து விடும். இந்தப் பட்டியலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்தி இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்கள். ஆட்சியர் இந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பார். 20 ஆம் தேதி வரை விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் உள்ளதால், 25 ஆம் தேதிக்கு பிறகு பயனாளிகள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்த வரையறைகளுக்கு உள்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டால் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளில் 50 முதல் 75 சதவீதம் பேருக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. எண்ணிக்கையை பொறுத்தவரை 1 முதல் 1.50 லட்சம் விவசாயிகள் பயனடையை வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com