நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 60 கிலோ கஞ்சா பறிமுதல்: தருமபுரி இளைஞர் கைது
By DIN | Published On : 14th February 2019 09:42 AM | Last Updated : 14th February 2019 09:42 AM | அ+அ அ- |

நாமக்கல் வழியாக காரில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து போலீஸார் வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேந்தமங்கலம் வழியாக வந்த கார், விதிகளை மீறி கோட்டை சாலையில் செல்ல முயன்றது. இதனால், போலீஸார் காரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது, காரில் வந்த இருவரும் தப்பியோட முயன்றனர்.
இருவரையும் துரத்திய போலீஸார், ஒருவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணையில், தருமபுரியைச் சேர்ந்த பிரபாகரன் (31) என்பதும், தப்பிச் சென்றவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த மணியனூரைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரத்திலிருந்து 60 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரைச் சோதனையிட்ட போலீஸார், ரூ. 6 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியதோடு, காரையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிரபாகரனைக் கைது செய்த போலீஸார், தலைமறைவான சீனிவாசனைத் தேடி வருகின்றனர்.