வீட்டு வரி பல மடங்கு உயர்வு: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

அரசு உத்தரவுக்கு முரணாக பல மடங்கு வீட்டு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த பாதிப்பு ஏற்படும்

அரசு உத்தரவுக்கு முரணாக பல மடங்கு வீட்டு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் நிலையில் நகராட்சி நிர்வாகம் வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.எம்.ஷேக் நவீத் தெரிவித்தது: தமிழக அரசு சொத்துவரி உயர்வு குடியிருப்புகளுக்கு 50 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், நாமக்கல் நகரில் அரசு உத்தரவுக்கு முரணாக குடியிருப்பு பகுதிகளுக்கு பல மடங்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.
பல குடியிருப்புகளுக்கு 50 சதவீத உயர்வுக்கு பதிலாக பல மடங்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 வீட்டு வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வரி ரூ.5,000 என தற்போது உயர்த்தி
விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ரூ.1,000 வரி விதிப்புள்ள வீட்டுக்கு ரூ.10,000-மாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. தவறான அளவீடு காரணமாக வரி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்த காலங்களில் 25 சதவீதத்துக்கு மேல் வீட்டு வரி உயர்வு செய்யப்படவில்லை. ஆனால் தற்போது மிக அதிகமாக வீட்டுவரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத வகையில் குப்பை வரியாக ஒவ்வொரு குடியிருப்புக்கும் 6 மாதங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.180
வசூலிக்கப்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளப்படி வீடுகளுக்கு 50 சதவீத வரி உயர்வும், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் செய்து உத்தரவிடுவதோடு, நகர் முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
இந்த வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுபோல் திமுக தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை வரி வசூலை நகராட்சி நிர்வாகம் நிறுத்திவைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com