அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 15th February 2019 08:36 AM | Last Updated : 15th February 2019 08:36 AM | அ+அ அ- |

ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூர் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, மடிக்கணினி, மிதிவண்டி வழங்கும் திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பை, பென்சில், சீருடைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமென்ட் ஆகிய திட்டங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்துப் பணிகள், பாலங்கள் திறப்பு விழா புகைப்படங்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வளைகாப்பு விழா நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், கொல்லிமலை நீர் மின் நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, புதிய மோகனூர் வட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி, குமாரபாளையம் நகராட்சிக்கான புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் மற்றும் விழாக்கள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் இந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு, தமிழ்நாடு அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் அறிந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி) கி.மோகன்ராஜ், (விளம்பரம்) சீ.கோகுல், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், ராசிபுரம் வட்டாட்சியர் மு.ஷாகுல்ஹமீது உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.