தீவிரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு இரங்கல்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதி தாக்குதலில் பலியான 40 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதி தாக்குதலில் பலியான 40 எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.
ஜம்மு -காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய காரில் சென்று எல்லைப் பாதுகாப்புப் படை(சிஆர்பிஃப்) வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. வீரர்களின் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, நாமக்கல் - மோகனூர் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாமக்கல் அனைத்து பொது நல அமைப்புகள் மற்றும்  சேவை சங்கங்களின் சார்பில் இரங்கல் ஊர்வலம் புறப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிக்கூண்டு முன் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த 40 வீரர்களின் புகைப்படங்கள் முன்  திரளான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
செலுத்தினர்.
திருச்செங்கோட்டில்...
காஷ்மீரில் தீவிரவாத  தற்கொலைத்  தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப்  வீரர்களுக்கு  திருச்செங்கோட்டில் பொதுமக்கள், காவல்துறையினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தற்கொலைத்  தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப்   வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த உயிரிழப்புகள் நாட்டு மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைத்  தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்  இணைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தினர்.  நாடு முழுவதும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்கக் கூடாது என வேண்டிக் கொண்டதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் தாங்களாகவே முன்வந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியை  செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com