Enable Javscript for better performance
பற்றி எரியும் காட்டுத் தீ... வனத்தை பாதுகாப்பது யார்?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

    பற்றி எரியும் காட்டுத் தீ... வனத்தை பாதுகாப்பது யார்?

    By DIN  |   Published On : 28th February 2019 09:25 AM  |   Last Updated : 28th February 2019 09:25 AM  |  அ+அ அ-  |  

    உயர்ந்த  மலைகளும், அதில் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களும்,  அடைக்கலம் புகுந்துள்ள விலங்குகளும், தித்திக்கும் கனிகளும் கிடைக்கும் வனத்தை பார்ப்பதே அழகு. 
    அவ்வாறு அழகுற காட்சியளிக்கும் வனம்,  சில வேளைகளில் பற்றி எரிந்து அவ்வப்போது தனது கொடூர முகத்தை காட்டுகிறது. தானாக தீப்பற்றுவதும், சில சமூக விரோதிகள் வனத்திற்குள் புகுந்து மரம், செடி, கொடிகளை தீக்கிரையாக்குவதும் வாடிக்கையாகியுள்ளது. கடந்த ஆண்டு நிகழ்ந்த குரங்கணி தீ விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது.  மலைப்பயிற்சி மேற்கொண்ட 10-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீக்குள் சிக்கி பலியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அதன்பின், தீத்தடுப்புக்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு பகுதியிலும் சம்பந்தப்பட்ட வனத் துறையினர் மேற்கொண்டனர்.
    கோடைக் காலம் நெருங்கி விட்டது.  ஆங்காங்கே மலைகளிலும், வனத்திலும் காட்டுத் தீ எரிந்து கொண்டிருக்கிறது.  சமுக விரோதிகள் வைத்த நெருப்பு வனத்தைச் சுற்றிலும், பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது.  வெயிலின் தாக்கத்தாலும் வனங்களில் உள்ள காய்ந்த சருகுகள் எரிவதற்கும் வாய்ப்புள்ளது. அண்மைக் காலமாக, வனம் சார்ந்த மாவட்டங்களான, தருமபுரி, சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் தீப்பற்றி எரிவதைக் காண முடிகிறது.
    இதனால்  மக்களுக்கு ஆபத்து இல்லாதபோதும், கோடைக் காலங்களில், கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்கவும், குளிர்ச்சி தரும் காற்று வீசுவதற்காக,  வணிக ரீதியான பயன்பாட்டுக்கும் மரங்கள் அவசியம் இருக்க வேண்டும்.  அண்மையில், ஏற்காடு கருங்காலி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்தது.  இதனால் அங்குள்ள ரோஸ்வுட், தேக்கு,  யூக்கலிப்டஸ் போன்ற மரங்கள் தீக்கிரையாகின.
    நாமக்கல் மாவட்டத்தில்,  ராசிபுரம் வனச்சரகத்துக்குள்பட்ட, மலைப் பகுதிகளில் மரங்கள் தீப்பிடித்து எரிகின்றன. பெரிய அளவிலான பாதிப்பு இல்லாதபோதும், ஆங்காங்கே மலையிலும், வனத்திலும் எரியும் நெருப்பால் அதைச் சுற்றியுள்ள கிராமத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.  தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, வனத் துக்குள் அத்துமீறி நுழைவோரைக் கண்டறிந்து, அவர்களை பிடிக்கும் நடவடிக்கை வனத் துறையினரால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
         மேலும்,  ஒவ்வொரு வனச் சரகத்திலும் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இக் கோடுகள் அமைப்பதன் மூலம் குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் மட்டுமே தீப்பற்றி எரியும். அதன்பின் தானாகவே தீ அணைந்து விடும்.  தகவல் அறிந்து வனத் துறையினர் சென்றாலும்,  அதை எளிதாக அணைத்து விட முடியும்.  தமிழகம் முழுவதும், இந்த தீத்தடுப்பு கோடு வனப் பகுதிகளில் அமைக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வனக் காவலர்கள் நாள்தோறும் முக்கியப் பகுதிகளில் ரோந்து செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
    இருப்பினும், கோடைக் காலம் முடியும் வரையில், வனப் பகுதிகளைப் பாதுகாப்பது வனத் துறையினரின் முக்கிய கடமை.  அவர்கள் மட்டுமின்றி,  சுற்றுலாவாசிகளும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். வனத்தையொட்டிய கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டால் பெரிய அளவிலான அசம்பாவிதங்களை வனத் துறையினரோடு இணைந்து தடுக்க முடியும் என்பது தன்னார்வலர்களின் கருத்து.
    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரணவ்குமார் கூறியது:   தமிழகத்தில் அதிக காடுகள் நிறைந்த இரண்டாவது மாவட்டமாக தருமபுரி.  அருகில் உள்ள சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மலைப் பகுதிகளும், வனப்பகுதிகளும் அதிகம் உள்ளன.  ஒகேனக்கல்,  அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வனத்தையொட்டிய பகுதிகளில் கோடைக் காலங்களில் மரங்கள் தீப்பற்றி எரியும் நிகழ்வுகள் நடக்கும்.  அதிவேக காற்றின் அசைவால் தீப்பிடிக்கலாம்.  மான்,  முயல் வேட்டைக்குச் செல்வோர் சிகரெட், பீடியை புகைத்து விட்டு அதை வீசியெறிந்து செல்லும்போது, சருகுகளில் தீப்பற்றி எரிவதற்கும் வாய்ப்புள்ளது. வனத் துறையினர் தீப்பற்றும் இடங்களைக் கண்டறிந்து,  ரோந்து செல்வது அவசியம்.  அவ்வாறான நடவடிக்கையை கோடைக் காலங்களில் மேற்கொண்டால் பெரிய அளவிலான அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்.
    தீத்தடுப்பு தொடர்பாக,   நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ஆர்.காஞ்சனாவிடம் கேட்டபோது:  காய்ந்த சருகுகளில் யாராவது நெருப்பைப் போடுவதனால் தான் அதிகம் தீப்பற்றுகிறது.  மரங்கள் உரசி தீப்பிடிப்பது அரிது.   நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில்,  நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன.
    வனப்பகுதியில் தீப்பற்றுவதைத் தவிர்க்க தீத்தடுப்பு கோடுகளை அமைத்து வருகிறோம்.  கிராம மக்களிடையே விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்குகிறோம்.  வனக் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறோம்.  தமிழகம் முழுவதும் புதிதாக 732 வனக் காப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    தற்போதைய சூழலில்,  மாவட்டத்தில் பெரிய அளவிலான தீப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.  தீப்பற்றும் முக்கிய பகுதிகளைக் கண்டறிந்துள்ளோம்.  வன ஊழியர்கள் 44 குழுக்களாகப் பிரிந்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்குச் சென்று தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  வனத் துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  அத்துமீறி வனப் பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  அலட்சியமாக போடும் சிறு தீப்பொறி அழிப்பது வனத்தை மட்டுமல்ல,  அங்கு வாழும் பல உயிர்களையும் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp