மூதாட்டியிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 28th February 2019 09:26 AM | Last Updated : 28th February 2019 09:26 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நகையைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
பரமத்தி வேலூர் பொன்னிநகரைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி நல்லம்மாள் (70). இவர் பொன்னி நகரில் இருந்து பொத்தனூர் சக்ரா நகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு திருமணமண்டபம் அருகே சென்ற போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், நல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து நல்லம்மாள் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.