சுடச்சுட

  

  தேவை அறிந்து தொழில் தொடங்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 01st January 2019 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறும் தொழிலையே தொடங்காமல், எது தேவை என்பது தெரிந்து அந்த தொழிலை தொடங்க வேண்டும் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
  நாமக்கல் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான, தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
  மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வதித்தார்.   எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர்,  சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  இந்நிகழ்ச்சியில் 888 தொழில் முனைவோர்களுக்கு ரூ.1,230 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.
  இதில் அமைச்சர் பி.தங்கமணி பேசியது: முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.   அதற்காக கடந்த 2015இல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ஏராளமான தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தார். 
  அதனைத்தொடர்ந்து,  2019இல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில்  நடைபெறவுள்ளது.  மாநாடு குறித்து நாமக்கல் மாவட்ட முன்னோடி தொழில் நிறுவனத்தினர், தொழில் முனைவோர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 
  புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறும் தொழிலையே தொடங்காமல் எது தேவை என்பது தெரிந்து, அந்த தொழிலை தொடங்க வேண்டும்.  ஒவ்வொரு தொழில் முனைவோரும் 5 பேர், 10 பேருக்கு வேலை வழங்கவேண்டும் என்ற உறுதியுடன் இறங்கினால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். 
  தமிழகத்தில் ஆண்டுக்கு 14 லட்சம் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.   இதன் காரணமாக கார் உற்பத்திக்கு முக்கியமாக விளங்கும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒரு கார் நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 50 முதல் 100 குறு, சிறு தொழில் நிறுவனங்கள் உருவாகி லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 
  தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பு விண்ணப்பித்து 24 மணி நேரத்திற்குள்ளும், குறு, சிறு தொழில் தொடங்குபவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.  தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் தொழில் நிறுவனங்களுக்கு டீசல் செலவு தற்போது இல்லை. 
  நாமக்கல் மாவட்டம் அனைத்து தொழில்களையும் மிகப்பெரிய அளவிலும் சிறப்பாகவும் செய்து வரும் மாவட்டமாகும்.  கோழிப்பண்ணை தொழில், ஆழ்துளைக்கிணறு அமைக்கும் தொழில், லாரி கட்டுமானத் தொழில், லாரி போக்குவரத்து தொழில், டேங்கர் லாரி தொழில், ஜவுளித் தொழில், சாயமேற்றும் தொழில், கல்விக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நாட்டிலேயே முன்னோடியாக நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது. 
  எந்த தொழில்களிலும் முன்னோடியாக இருப்பவர்கள் மிகச் சாதாரண நிலையில் இருந்து அயராது உழைப்பினாலும், தொழில் திறமையினாலும் படிப்படியாக முன்னேறி இப்போது முதலிடத்தில் உள்ளனர்.   புதிதாக தொழில் துவங்கவுள்ள தொழில் முனைவோரும் தொடங்குவது எந்த தொழிலாக இருந்தாலும் அச்சப்படாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அயராது உழைத்தால் மிகப்பெரிய நிலையை அடையலாம் என்றார். 
  தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் தேவையான விவரங்கள் குறித்து அமைச்சர் தங்கமணி,  ஆட்சியர், மாவட்ட தொழில் மைய  பொது மேலாளர் மற்றும் வங்கி மேலாளர்கள் விளக்கம் அளித்தனர். 
  கூட்டத்தில் ராசிபுரத்தை சேர்ந்த செல்வபிரகாஷ் என்ற தொழில் முனைவோர் நெகிழி பைகளுக்கு மாற்றாக உறுதியிலும், பயன்பாட்டிலும் சிறந்த, எளிதில் மக்கக்கூடிய மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை மூலப்பொருளாக கொண்டு பை தயாரிக்கும் முறை குறித்து விளக்கமளித்தார். 
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.ரங்கசாமி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் ஆர்.பாஸ்கரன், முன்னோடி ஆற்றல் தணிக்கையாளர் வெங்கட நாராயணன், முன்னோடி வங்கி மேலாளர் எம்.முத்தரசு, மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத்தலைவர் பி.இளங்கோ, மாவட்ட தொழில் மைய மேலாளர் தே.சிவக்குமார் உள்ளிட்டோர்
  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai