சுடச்சுட

  

  வீழ்ச்சியில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை: மீட்டெடுக்க அரசு உதவுமா?

  By கே. விஜயபாஸ்கர்  |   Published on : 01st January 2019 07:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர் இழப்பைச் சந்தித்து வருவதால், ஆலையின் செயல்பாடு இன்னும் சில ஆண்டுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 100 கோடி லாபத்தில் இயங்கிய ஆலை, தற்போது கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.  ஆலை படிப்படியாக முடங்க ஆலை நிர்வாகம்தான் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
  கடந்த 1964 -ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது.  இந்த ஆலைக்கு சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் வைக்கப்பட்டது.   நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகும்,  ஆலை அதே பெயரிலேயே இயங்கி வருகிறது.
  இந்த ஆலை கடந்த 2013-ஆம் ஆண்டு வரை நல்ல லாபத்தில் இயங்கி வந்தது.  2013-ஆம்  ஆண்டில் ஆலையின் லாப இருப்பு மட்டும் ரூ. 100 கோடி என்ற அளவில் இருந்தது. ஆனால், அதன்பிறகு ஆட்சியாளர்களின் பாராமுகம் மற்றும் நிர்வாகத் திறன் இன்மையால் ஆலை தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
  இதனால், சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டில் இருந்த பாலிடெக்னிக் கல்லூரியையும் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.   இப் பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாலிடெக்னிக் கல்லூரியை கடந்த ஆண்டில் அரசு ஏற்றுக் கொண்டது.
  இதுகுறித்து சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் ஓ.பி. குப்புதுரை தெரிவித்தது:
  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு அதிகப் பரப்பில் பயிரிடப்பட்ட காலத்தில் ராஜா வாய்க்கால் பராமரிப்புப் பணிக்கான செலவையும் ஆலை நிர்வாகம் ஏற்றது.  இதனால் கரும்பு சாகுபடி அதிகரித்து, சிறப்பு அரவைப் பருவத்தை ஏற்படுத்தி, கரும்பு அரவை செய்யப்பட்டது. ஆனால், ராஜா வாய்க்காலில் 6 மாதங்கள்கூட தண்ணீர் வராததால், கடந்த 5 ஆண்டுகளாகவே கரும்பு சாகுபடி 1,000 ஏக்கர் அளவுக்குக் குறைந்துவிட்டது. 
  ரூ. 100 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி வைத்திருந்த ஆலையின் இப்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.  இந்த ஆலை மீண்டும் பழைய நிலைக்கு வர ராஜா வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விட வேண்டும். 
  உலக அளவில் சர்க்கரைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், ஆலையில் மாற்றுப் பொருள்களான எத்தனால் தயாரிப்பு அளவை அதிகரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.  ஆலை வளாகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் உற்பத்தி நிலையப்  பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஆண்டு முழுவதும் தண்ணீர் விடப்படும் என மாவட்ட நிர்வாகம் இப்போது உறுதியளித்தால்கூட,  நிகழாண்டில் கரும்பு சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நலிந்துவரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் புத்துணர்வு பெற மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்.

  ஆலை முடங்க காரணம்
  மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஓர் அரவைப் பருவத்தில் 4.5 லட்சம் டன் வரை அரவைக் காலம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரவைப் பருவத்தில் 6 மாத காலத்தில் அரைக்க முடியாமல் சிறப்பு அரவைப் பருவம் அறிவிக்கப்பட்டு, கரும்பு அரைத்துக் கொடுத்த பெருமையைக் கொண்டது இந்த ஆலை.  ஆனால், இப்போது மிகவும் பரிதாபமான நிலையில் ஆலை உள்ளது.
  கடந்த 5 ஆண்டுகளாக ஒரு அரவைப் பருவத்துக்கு 1 லட்சம் டன் அளவுக்கு குறைவாகத்தான் கரும்பு அரைக்கப்படுகிறது. இதிலும் 50 சதவீதம் விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டு வந்து அரவை செய்யப்பட்டு வருகிறது.  போதிய அளவு கரும்பு இல்லாததால், ஆலை ஒவ்வோர் அரவைப் பருவத்திலும் 2 மாதங்கள் கூட இயங்க முடியவில்லை.  இதனால் ஆலையின் வர்த்தகம் குறைந்து தொடர்ந்து இழப்பை எதிர்கொள்ளும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

   


  மீட்டெடுக்க ஆலோசனை கூறும் விவசாயிகள்...
  ஆலையின் அரவைத் திறனான 4.5 லட்சம் டன் அளவுக்கு முழுமையாக கரும்பு தரும் பகுதியாக காவிரி ஆற்றுப் பாசனமான ராஜா வாய்க்கால் இருந்தது.  ராஜா, மோகனூர், குமாரபாளையம், பொய்யேரி வாய்க்கால்களில் 25,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
  ராஜா வாய்க்காலில் ஆண்டுக்கு 350 நாள்கள் தண்ணீர் விட வேண்டும் என அரசாணை உள்ளது.  
  இந்த வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்தபோது சுமார் 10,000 ஏக்கர் அளவுக்கு கரும்பு நடவு செய்யப்பட்டு வந்தது.
  கடந்த 5 ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் ஆண்டுக்கு 6 மாதங்கள்கூட தண்ணீர் வராத நிலையில், கரும்பு சாகுபடி 1,000 ஏக்கர் அளவுக்குக் குறைந்துவிட்டது.
  வறட்சி பிரதான காரணமாக இருந்தாலும்,  சரியான திட்டமிடல் இல்லாததால், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து ஆண்டு முழுவதும் ராஜா வாய்க்கலில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai