சுடச்சுட

  

  எம்.பி.க்கள் இடைநீக்கம்: தமிழக மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

  By DIN  |   Published on : 03rd January 2019 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம், தமிழக மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். 
  காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்தும், தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்ட வலியுறுத்தியும் வியாழக்கிழமை (ஜன. 3) ஒசூரிலிருந்து விவசாயிகளுடன் பேரணியாகச் சென்று மேக்கேதாட்டுவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார்.
  இதன்படி, விவசாயிகளுடன் நாமக்கல் வழியாக புதன்கிழமை மாலை ஒசூர் சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக, மத்திய அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கி இருப்பதை கண்டித்து போராட்டம் வலுப் பெற்றுள்ளது.
  20 நாள்களுக்கு மேலாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசு, தமிழக நாடளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சஸ்பெண்ட் உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
  மேக்கேதாட்டுவில் அணை கட்ட சட்டத்துக்கு புறம்பாக கொடுத்த அனுமதியை ரத்து செய்யாத மத்திய அரசு, சட்டத்துக்குள்பட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் தமிழக மக்களை அவமதித்துள்ளது.
  முற்றுகைப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.  மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் சுமார் 30 கிராமங்கள் பாதிக்கப்படும் என அணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்கின்றனர் என்றார். 
  முன்னதாக,  பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் நாமக்கல் அரசு மருத்துவமனை முன் மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்தததைக் கண்டித்தும் சிறிது தூரம் பேரணியாக சென்று முழக்கம் எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai