சுடச்சுட

  

  சாலை விதிகளை மீறிய 4,000 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து: காவல் கண்காணிப்பாளர் தகவல்

  By DIN  |   Published on : 03rd January 2019 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை விதிகளை மீறியதாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,000 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: நாமக்கல் மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டில் திருட்டு குற்றவழக்குகளை பொறுத்தவரை, 191 குற்ற வழக்குகளில் 179 வழக்குகள் (95 சதவீத வழக்குகளில்) குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன வழக்கு சொத்துகள் சுமார் ரூ.1.34 கோடி மீட்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  குற்றவழக்குகளை பொறுத்தவரை 2017-ஆம் ஆண்டை விட 12 சதவீதம் திருட்டு சொத்துகள் அதிகமாக மீட்கப்பட்டுள்ளன. அதுபோல், திருட்டு மற்றும் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் 22  பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
  வாகன விபத்துகளை பொறுத்தவரை, 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த 385 சாலை விபத்து இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 413 நபர்கள் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் இறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 
  அதேபோல், 2018-ஆம் ஆண்டு 1,554 காய விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,172 நபர்கள் காயமடைந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டை காட்டிலும் 2018-ஆம் ஆண்டு வாகன விபத்துகள் குறைந்துள்ளன.
  வாகன விபத்தை குறைக்க சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 4,000 பேரின் வாகன ஓட்டுநர் உரிமங்களை போக்குவரத்துத் துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
  சாலை விபத்துகளை குறைக்கவும் மற்றும் குற்றச் செயல்களை கண்காணிக்கவும் இதுவரை சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து அரசு ஒதுக்கீட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு இடங்களிலும், மாநில நெடுஞ்சாலைகளில் இரண்டு இடங்களில் பல வண்ண ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
  அதேபோல் 1,274 இடங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் சாலை விபத்தை கண்காணிக்கவும், குற்ற வழக்குகள் நடப்பதை கண்காணிக்கவும் 1,338 சிசிடிவி-க்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் பயனாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  பாலியல் குற்ற வழக்குகளில், 2018-ஆம் ஆண்டில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு மற்றும் உள்ளுர் சட்டங்களின்படி, கஞ்சா விற்பனையில் 22 வழக்குகளும், சூதாட்டத்தில் 98 வழக்குகளும், மதுவிலக்கு குற்றங்களில் 3,794 வழக்குகளும், மணல் திருட்டுகளில் 37 வழக்குகளும், மணல் திருட்டில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தும், போலி லாட்டரி குற்ற வழக்குகளில் 183 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  முக்கியமாக, கடந்த நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை சில மணி நேரத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கேரள மாநிலத்துக்கு எரிசாராயம் கடத்திச் செல்லும் இரண்டு லாரிகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது முக்கியமானதாகும்.
  மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டில் 13 கொலை வழக்கு மற்றும் இரண்டு ஆதாய கொலை வழக்குகளில் ஆயுள்தண்டனையும், சிறார் மீதான பாலியல் வன்கொடுமை குற்றவழக்குகளில் 18 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், நீதிமன்றம் மூலம் தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 
  மொத்தத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டை விட, 2018-ஆம் ஆண்டில் திருட்டு குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை சிறப்பாக கையாளப்பட்டு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai