காணொலி முறையில் விவசாயிகளுக்கு ஆலோசனை: ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில், காணொலி காட்சி முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு  சார்ந்த ஆலோசனைகளைப் பெற்றனர்.
நிகழ்ச்சியில் நெல், நிலக்கடலை, மக்காச்சோளம், எள்ளு, பயறு வகைகள், சிறுதானியங்கள் ஆகிய வேளாண் பயிர்கள் தொடர்பான சாகுபடி தொழில்நுட்பங்கள், உரமேலாண்மை, பூச்சிக் கட்டுபாடு, மண்வளத்தைப் பேணுதல் மற்றும் கூட்டுபண்ணையம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு ஓய்வுபெற்ற வேளாண்மை துணை இயக்குநர் தங்கராஜூ ஆலோசனை வழங்கினார்.
தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மரவள்ளி, புடல், மிளகாய், சப்போட்டா மற்றும் வாழை ஆகிய பயிர்களில் பூச்சி மற்றும் நோய்மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை ஓய்வுபெற்ற தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அசோகன் வழங்கினார். 
 ஓய்வுபெற்ற கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ராஜா, கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் முறைகள், கோமாரி நோய் வருவதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், மடிநோயை கட்டுப்படுத்துதல், பருவத்துக்கு வராத, சினை பிடிக்காத கால்நடைகளை பராமரிக்கும் முறைகள், கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை, கோழிகளில் நோய்த் தடுப்பு முறைகள், கால்நடை வளர்ப்பில் பொருளாதார இழப்பை தவிர்த்தல் மற்றும் மண்ணில்லா தீவனம் தயாரிப்பு போன்றவை குறித்த ஆலோசனைகளை வழங்கினார். 
 மேலும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் காலநிலை குறித்த தகவல்களை தேவையான நேரத்தில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண் 18004198800 என்ற எண்ணிலிருந்தும் பெறலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எம். காளிமுத்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com