ஆஞ்சநேயர் கோயில்களில் ஜயந்தி விழா

ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜயந்தி விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது


ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜயந்தி விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்கார தரிசனம், ஸ்ரீராமர் பாதம், நவமாருதி திருமஞ்னம், புண்யாக வாஜனம், சகஸ்ரநாம அர்ச்சனை போன்றவை நடைபெற்றன.
பின்னர் சனிக்கிழமை அதிகாலை முதல் வேதபாராயணம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம், காயத்ரி ஹோமம், மூலமந்திர ஹோமம் போன்றவை நடத்தப்பட்டு, தங்கக் காப்பு, திருமஞ்சன அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். பின்னர் மாலை உற்சவம் திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டார். 
இதேபோல், ராசிபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில், முத்துக்காளிப்பட்டி வைர ஆஞ்சநேயர் கோயில், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் போன்ற இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பஙகேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு தெப்பக்குளம் தெருவில் உள்ள அனுமன் கோயில், குமரேசபுரம் பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயில், அக்ரஹாரம் தெருவில் உள்ள சஞ்சீவராய பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காலை நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், ஹரிநாம சங்கீர்த்தன பஜனை, மகா அஷ்டாபிஷேகம், பஞ்சவாத்ய சேவை ஆகியவை நடைபெற்றன. சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சஞ்சீவராயப் பெருமாள் கோயிலில் ஆயக்குடி குமார் பாகவதர் குழுவினரின் பஜனை, கோலாட்டம், கும்மி ஆகியவை நடைபெற்றன. மாலை பஞ்சவாத்ய இசையுடன் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது.
பரமத்தி வேலூரில்...
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அனுமன் ஜயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே அனிச்சம்பாளையம் செல்லும் வழியில் காவிரி கரையோரம் உள்ள குட்டுக்காடு பகுதியில் காவிரி ஆஞ்சநேயர் கோயில்
உள்ளது.
17-ஆம் ஆண்டு அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் கணபதி ஹோமமும், 10.30 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர், 1,008 வடை மாலை சாற்றப்பட்டது. 12 மணிக்கு தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதேபோல நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள காரிய சித்தி ஆஞ்சநேயருக்கு 35-ஆம் ஆண்டு ஜயந்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 8 மணி அளவில் கோ மாதா பூஜை, சுதர்ஸன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு துளசி, வெற்றிலை, வடை மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காரிய சித்தி ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். மேலும் சக்திநகர் ஆஞ்சநேயர், காவிரி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆகிய கோயில்களில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள்
நடைபெற்றன.
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் வெள்ளிக்கவசத்தில் வெற்றிலை மாலையுடன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com