சுடச்சுட

  

  லாரி ஓட்டுநர் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

  By DIN  |   Published on : 08th January 2019 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பட்டா மாறுதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்த லாரி ஓட்டுநர் குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட முயற்சி செய்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
  மோகனூர் வட்டம், செவந்திப்பட்டி அருகே பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி ஓட்டுநர். இவர், தனது மனைவி சுமதி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.
  அப்போது 25 ஆண்டுகளாக பட்டா மாறுதல் செய்து தராமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகக் கூறி கிருஷ்ணன் திடீரென முழக்கம் எழுப்பினார். இதனால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிருஷ்ணனை குடும்பத்துடன் வெளியேற்ற போலீஸாருக்கு உத்தரவிட்டனர். 
  இருப்பினும் பட்டா மாறுதல் வழங்காததை கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு வந்த அவர்கள், ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் அருகே தர்னா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
  அவர்களை போலீஸார் சமாதானம் செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனிடையே கிருஷ்ணன் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
  எனது தந்தை பழனியப்பன், தாத்தா பெரியண்ணன் ஆகியோர் கடந்த 1982-ஆம் ஆண்டு ராமனுஜம் வகையறாக்களிடமிருந்து கிரையம் பெற்று, தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து அனுபவித்து வந்த சுமார் 8 ஏக்கர் நிலம், 1986-ஆம் ஆண்டு நில அளவை மேம்பாட்டு திட்டத்தில் குட்டை என மாறுதல் செய்யப்பட்டதால், எங்கள் வாழ்வாதாரம் முடங்கி விட்டது.
  எனது தந்தை பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பட்டா மாறுதல் செய்யாததால் நாமக்கல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது.
  இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அதிகாரிகள் எங்கள் பெயரில் நிலங்களை பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றனர். நானும் பலமுறை மனு கொடுத்தும் பட்டா மாறுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
   இந்த நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி செவிந்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் என்னிடம் அந்த நிலங்களை எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய இயலாது என்றும்,  உரிமையியல் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறினார். 
   இவ்வழக்கை அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதால், தொடர்ந்து வழக்கை நடத்த எங்களுக்கு வசதி இல்லை. மேலும் கடன் பிரச்னையும் நிறைய உள்ளது. இதனால் நான் என் குடும்பத்துடன் திங்கள்கிழமை (ஜன. 7) காலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai