பள்ளி அருகே அரசு மதுபானக் கடை திறக்கும் முடிவை கைவிட மாணவிகள் கோரிக்கை

பள்ளி அருகே அரசு மதுபானக் கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் அரசுப் பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி அருகே அரசு மதுபானக் கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் அரசுப் பள்ளி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராசிபுரம் அருகே ரா.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பெற்றோருடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனர்.
அங்கு மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியத்தை சந்தித்த மாணவிகள், அவரிடம்  அளித்த மனு விவரம்:
ரா. பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 மாணவிகள் படித்து வருகிறோம். இதில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பள்ளி அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாக அறிகிறோம்.
மதுபானக் கடை அமையவுள்ள பகுதியில் உள்ள சாலை வழியாக தான் பள்ளிக்குச் சென்று வர வேண்டும். இங்கு கடை திறக்கப்பட்டால் தினமும் மாணவர்கள் அச்ச உணர்வுடன் பள்ளிக்குச் சென்று வர வேண்டிய சூழல் ஏற்படும். மேலும் பல்வேறு இடையூறுகளால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படக்கூடும்.
மேலும் அந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. கால்நடை மருத்துமனைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். துணை சுகாதார நிலையம், நூலகம் இருப்பதால் மதுபானக் கடை திறந்தால் தேவையில்லாமல் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, இப் பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com