மலைப் பகுதி கோயில்களுக்கு திருப்பணி நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 09th January 2019 08:07 AM | Last Updated : 09th January 2019 08:07 AM | அ+அ அ- |

மலைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு திருப்பணி நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: கொல்லிமலை அடிவாரம் பேளுக்குறிச்சி அருகில் உள்ள கூவை மலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.
கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதியில் உள்ள சிறு கோயில்களில் திருப்பணி செய்ய அரசால் ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது.
மலைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு கட்டுமான பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதால், செலவு அதிகரிக்கிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்கான நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன்.
கூவைமலை பழனியாண்டவர் கோயிலில் ரூ. 60 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய பணிகள் 3 மாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயிலை பொறுத்தவரை, திருப்பணிகள் தொடர்பாக தொல்லியல் துறை தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. திருப்பணி தொடர்பாக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு திருப் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதுபோல், சேந்தமங்கலம் லஷ்மி நாராயண பெருமாள் கோயிலில் ரூ. 36 லட்சம் செலவில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும் இந்தக் கோயிலில் உற்சவர் மண்டபம் கட்ட ரூ. 39 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை கருத்தை பெற்று, உயர் நீதிமன்றம் அமைத்துள்ள குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
மலைப் பகுதியில் உள்ள சிறு கோயில்களுக்கு திருப்பணி நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக எம்எல்ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.