வேலைநிறுத்தப் போராட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை

தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு

தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாமக்கல் மாவட்டத்தில் இயல்பு வாழக்கையில் பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் மத்திய அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. 
 மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். 
 விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை செய்ய மறுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தொலைத்தொடர்பு, சுகாதாரம், கல்வி, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் கலந்துகொள்கின்றனர். பொதுத்துறை வங்கி ஊழியர்களும் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அஞ்சல் நிலையங்களில் மொத்தம் உள்ள 950 பேரில் 760 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கிராமபுறங்களில் பல அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே, அஞ்சல் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. 
 இதேபோல் மொத்தம் உள்ள 1,006 வங்கி பணியாளர்களில் 228 பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வங்கி சேவையும் பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 210 காப்பீட்டு ஊழியர்களில் 95 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்களை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 280 பேரில் 136 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் வருமானவரித் துறை அலுவலர்களும் 90 சதவீதம் பேர் செவ்வாய்க்கிழமை பணிக்கு வரவில்லை. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
பேருந்துகள் இயங்கின... போக்குவரத்துத் தொழிலாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாவட்டத்தில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கின. சுமார் 10 சதவீத அளவில் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்படவில்லை.
லாரி, கார் உள்ளிட்ட இதர வாகனங்களும் வழக்கம்போல் இயங்கின. அனைத்துக் கடைகளும் திறந்து இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட
வில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com