சுடச்சுட

  

  மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 306 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒப்பந்த வேலை முறையை கைவிட வேண்டும். மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கக் கூடாது. தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை பல்வேறு தொழிற்சங்கங்கள்
  அறிவித்தன.
  செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தால், மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. இந்நிலையில், இரண்டாவது நாளாக தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
  நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் ச.பழனியப்பன், என். தம்பிராஜா, பி. சிங்காரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து, நியாய  விலைக் கடைகளில் அனைவருக்கும் பொருள்களை வழங்கி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.3 ஆயிரத்துக்கும் குறையாமல் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். போனஸ், பி.எப். வழங்குவதில் அனைத்து உச்சவரம்பையும் நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.
  இதுபோல், நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை வாழவந்திநாடு, பள்ளிபாளையம், வெப்படை ஆகிய இடங்களிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதன்படி, மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 86 பெண்கள் உள்பட 306 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  அதேவேளையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதனால், பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளாயினர்.
  ராசிபுரத்தில்...
  ராசிபுரம் வட்டார சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. ராசிபுரம் கனரா வங்கி முன் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  திருச்செங்கோட்டில்...
  திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஏஐடியுசி சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் 6 பெண்கள் உள்பட 56 பேர் கைது
  செய்யப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai