சுடச்சுட

  

  திமுக கூட்டணியில் தான் கொ.ம.தே.க. உள்ளது: ஈ.ஆர். ஈஸ்வரன் பேட்டி

  By DIN  |   Published on : 11th January 2019 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில்தான்  இருக்கிறது என அக் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார்.
  நாமக்கல்லில் அவர் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
  தமிழகத்தில் தேர்தல் என்பதே இனி நடக்காதா? என்கிற சந்தேகத்தை மக்களுக்கு தேர்தல் ஆணையச் செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ளன.  திருவாரூர் தேர்தலை அறிவித்துவிட்டு புயல் நிவாரணம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளரிடம் கேட்காமலா?  தேர்தலை அறிவிக்கும். இதெல்லாம் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  இனி எந்தத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தாலும், அது நடக்குமா? என்ற சந்தேகம் மக்களிடையே வருவதைத் தவிர்க்க முடியாது.
  தமிழகத்தில் 21 தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் காலியாக உள்ளன.  அதிலும் 18 தொகுதிகள் ஆண்டுக் கணக்கில் காலியாக இருக்கின்றன.
  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல் வளர்ச்சித் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்? . எனவே, காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆணையம் முன்வர வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலையும் இதற்கு மேலும் தாமதப்படுத்தாமல் உடனடியாக நடத்த முன்வர வேண்டும்.
  தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது,  அதே நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ. 1,000 என்பது தேவையற்றது.  அதே சமயத்தில் தேவையான மக்களுக்கு, அது தேவையாகவும் இருக்கிறது.  ரூ. 1,000-த்தை வைத்து பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வாய்ப்புள்ளது. 
  நாடாளுமன்றத் தேர்தல் வெகு சீக்கிரம் வர இருக்கும் காரணத்தினால் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள்.  நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், கொடுப்பதைக் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
  திமுக கூட்டணியில்தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொடந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.  இதற்கான கேள்விக்கு இடமே கிடையாது. தொகுதி சம்பந்தமான விஷயம் இதுவரை பேசப்படவில்லை.  தேவை வரும் போது பேசப்படும். 
   கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதற்கு வரவேற்பை தெரிவித்து கொள்கிறேன்.  அதேபோல், பொள்ளாச்சி மற்றும் கோபிசெட்டிபாளையத்தையும் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என்றார்.
    தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார்.  கூட்டத்தில் பேரவைத் தலைவர் தேவராசன், மாவட்டச் செயலர் மாதேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள் சின்ராஜ்,  துரை, மாவட்டப் பொருளாளர் மணி,  துணைச் செயலர்கள் செல்வராஜ்,  குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai